2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடமாகாண சபை எதிர்க்கட்சியின் முதலாவது பிரேரணை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபையில் நேற்றுடன் 6 அமர்வுகள் நடைபெற்ற நிலையில், முதலாவது தடவையாக வடமாகாண சபையின் எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்ட இரு பிரேரணைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனால் முன்வைக்கப்பட்ட முதலாவது பிரேரணை நேற்று (18) வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், வடமாகாண சபையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் உதவியோடு முத்திரை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேறியது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போது, குறித்த இரு பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றிய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கூறுகையில்,

'இந்திய இழுவைப் படகுகளின் செயற்பாட்டால் எமது மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு எமது கடல் வளமும் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த மீனவர்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுவிக்கப்பட்ட போதும் இன்றும் எங்கள் கடற்பிரதேசத்தில் இந்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன' என்றார்.

'இப்போதும் நான் இருக்கும் இடத்தில் கூட (சிறைச்சாலையில்) பெருமளவான இந்திய மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான செயற்பாட்டைக் கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் ஒரு விசேட குழுவொன்றை அமைத்து ஜனாதிபதியுடன் இதுதொடர்பில் கலந்துரையாட வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வவேஸ்வரன், 'இழுவைப்படகுகள் தொடர்பில் ஜனாதிபதியோடு கதைக்க வேண்டும் என்று நீங்கள் கூறமுடியாது' என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கமலேந்திரன், 'இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரச்சினை இருநாட்டுப் பிரச்சினை. இதற்கு ஜனாதிபதியுடன் பேசாமல் தீர்வு காணமுடியாது' என்று அவர் தெரிவித்தார்.

அத்தோடு வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 06ஆவது அமர்வுகள் நடைபெறுகின்றபோது பல தீர்மானங்கள் இந்த உயரிய சபையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் நடைமுறைச் சாத்தியமான தீர்மானமாக அமையவில்லை என்று நான் கருதுகின்றேன். இருந்தாலும் இந்த சபையில் வடமாகாண சபையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் உதவியோடு முத்திரை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற தீர்மானத்தையும் நான் இந்த சபையில் முன்வைக்கின்றேன்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X