2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கு சிலர் முயற்சி

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றத்திலுள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு யாரும் முன்வருவதில்லை' என யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்களின் புள்ளிவிபரத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தவறாக வெளியிடுவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலரிடம் சுந்தரம் அருமைநாயகத்திடம் வினாவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்களின் புள்ளிவிபரங்களை பிரதேச செயலர்கள் வழங்குவதன் அடிப்படையில், யாழ். மாவட்ட செயலகம் அவற்றினை திரட்டி, அப்புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விபரம் யாழ். மாவட்ட செயலரின் தனிப்பட்ட புள்ளி விபரம் அல்ல.

கடந்த 4ஆம் திகதி வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாடடில்  யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, மீள்குடியேற்ற அமைச்சின் பிரதிச் செயலாளர் யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடி புள்ளி விபரங்களை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரத்து 878 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என தெரிவித்திருந்தேன். அத்துடன், மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீள்குடியேற்றத்திற்கு பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் மீள்குயேற்றத்தின் போது வருகை தந்தால், அவர்களையும் அந்த மீள்குடியேற்றத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மீள்குடியேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள், என்னுடன் சந்திப்பினை மேற்கொண்டு மீள்குடியேற்றத்திற்கான கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு மீள்குடியேற்றம் தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்காது, யாழ். மாவட்ட செயலர் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் பிழை எனக் கூறுவது நாகரீகமற்ற செயல் ஆகும்.

இதன்மூலம், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராது,மக்களின் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கு சிலர் முயல்கின்றமை தெரியவருகின்றது.

இவ்வாறு செய்பவர்கள், வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனரா என்று நான் சந்தேகப்படுகின்றேன்.

தற்போது புள்ளி விபரத்திலுள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, காணி அற்றவர்களையும் உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எமது மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டு விடும். அதற்கு இடமளிக்காது, வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்வதற்கு விரும்புவர்கள் தமது கருத்துக்களை என்னிடம் தெரிவித்தால், மீள்குடியேற்றத்திலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்' என்று மாவட்டச்  செயலர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .