2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பயத்தின் மூலம் மக்களை அடக்க முயற்சி : விஜயகலா

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

எமது மக்களை பயத்தின் மூலம் அடக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதே வீதிச் சோதனை நடவடிக்கைக்கு காரணம். தர்மபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு எம்மக்கள் சுதந்திரமாகச் சென்று வருவதினை முடக்கும் செயல் என ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.காக்கைதீவுக் அருகில் அராலி வீதியில் (யாழிலிருந்து வட்டுக்கோட்டை செல்லும் வழி) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீதியில் செல்வோரினை மறித்து சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றினை சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காரைநகரிலிருந்து அவ்வீதி வழியாக வந்தகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலாவினை மறித்துச் சோதனை மேற்கொள்ள முற்பட்ட வேளை அதனை விஜயகலா எம்.பி எதிர்த்து அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகலா தெரிவிக்கையில்

'நான் அவ்வீதியூடாக வரும் போது, 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவ்வீதியினூடாகப் பயணிப்பவர்களை மறித்து ஓரமாக கதிரையில் அமர்ந்திருந்த பொலிஸாரிடம் சோதனை நடவடிக்கைக்காக அனுப்பிக் கொண்டிருந்தனர். அவ்வேளை எனது வாகனத்தினையும் மறித்தனர்.

எனக்கு முதலே அங்கு பெருமளவானவர்கள் மறிக்கப்பட்டு அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதன்போது நான் இராணுவத்தினரைக் கேட்டேன் 'யாழ்ப்பாணத்தில் இவ்வளவு பொலிஸார் இருக்கும் போது நீங்கள் ஏன் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றீர்கள் என்று. அதற்கு அவர் தாங்கள் பொலிஸாருக்கு உதவி புரிகின்றோம் எனத் தெரிவித்தனர்.

அவ்வேளை இவ்வாறான நடவடிக்கையில் நீங்கள் ஈடுபடமுடியாது, எமது மக்களை நீங்கள் மேலும் மேலும் துன்புறுத்தக்கூடாது என கூறியதுடன், அங்கு சோதனை நடவடிக்கைகளுக்காக காத்திருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன்.

அத்துடன், அந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது கையூட்டு வாங்குதவற்காகவே. ஏனெனில் அவ்விடத்தில் இவ்வளவு போக்குவரத்து நெரில் ஏற்படுகின்றது என்பது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் என்ற வகையில் அவருக்கு அக்கறையில்லை.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர் என்மீது முறைப்பாடு தெரிவிக்கப்படுவதாக கூறினார். நான் அந்த முறைப்பாட்டினை எதிர்கொள்ளத் தயார் எனத் தெரிவித்துவிட்டு வந்தேன்.

பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது நிறுத்தப்படும் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 26 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் வீதியில் வாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .