2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஜெனீவா பற்றி கதைப்பதற்காக தென்னாபிரிக்கா செல்லவில்லை: சுரேஷ்

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தென்னாபிரிக்கப் பயணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமே தவிர ஜெனீவாத் தீர்மானத்திற்கு பின்னரான செயற்பாடல்ல' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

'எமது பயணம் தென்னாபிரிக்க குழுவின் அழைப்பின் பெயரில் இடம்பெறவுள்ள அதேவேளை, நாங்கள் ஜெனீவா பற்றி அங்கு கதைக்கச் செல்லவில்லை. தற்போது இங்குள்ள நிலைமைகள் குறித்த அவர்களுக்குத் தெளிவுபடுத்தவே செல்கின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'எமது தென்னாபிரிக்கப் பயணம் குறித்து பிழையான தகவல்கள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், எங்கள் பயணம் ஏற்கனவே திட்டமிட்ட பயணம்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடந்தபோது, இலங்கை வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தென்னாபிரிக்கா இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது போல எங்கள் பிரச்சினைக்கும் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

அதற்கமைய தென்னாபிரிக்க அரசாங்கம் குழுவொன்றினை அமைத்து செயற்பட்டு வருகின்றது. அக்குழுவின் அழைப்பினை ஏற்று ஏற்கனவே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தென்னாபிரிக்கா சென்று வந்துள்ளனர்.

எமது பயணம் தென்னாபிரிக்க குழுவின் அழைப்பின் பெயரிலே  இடம்பெறவுள்ளது.   நாங்கள் ஜெனீவா பற்றி அங்கு கதைக்கச் செல்லவில்லை. தற்போது இங்குள்ள நிலைமைகள் குறித்த அவர்களுக்குத் தெளிவுபடுத்தவே செல்கின்றோம்.  ஏனெனில் வடக்கில் சுமூகமான நிலையொன்று ஏற்படும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.

ஜெனீவா தீர்மானத்தின்படி இலங்கையில் சர்வதேச விசாரணைகள் இடம்பெறும். வலி.வடக்கில் விமான நிலையத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு எவ்வித வாய்ப்புக்களும் இல்லையென யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயப் பெரேரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம் கூறியிருக்கின்றார். எனினும் அவர் அவ்வாறு கூறுவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை' என அவர்  மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .