2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழ் பிரதேசங்களை அடையாளம் காட்டாதவாறு ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது: சி.வி

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் சேரும் இடங்களைத் தொடர் தமிழ்ப் பிரதேசம் என்று அடையாளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

யாழ்.தொல்புரம் பகுதியில் அன்பர் ஒருவரின் 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'அண்மையில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களைச் சென்று பார்த்தேன். களப்பின் அடுத்த பக்கத்தில் கிழக்கு மாகாணக் கிராமமான தென்னைமரவாடி இருக்கின்றது. தொடர்ச்சியாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த அந்த இடத்தில் தமிழர் தாயகம் தொடர்ச்சியாக என்றுமே இருந்ததில்லை என்று காட்டும் நோக்கில் அங்கு சுமார் 350 சிங்களக் குடும்பங்கள் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

முன்னர் நீர்கொழும்பில் இருந்து காலத்திற்குக் காலம் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போது சில மாதங்களுக்கு மீன்பிடிப்பில் ஈடுபட அங்கு வந்தவர்கள் தற்போது தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியேறியுள்ளார்கள். இவர்களுள் முன்னர் அங்கு வந்து சென்ற சிங்கள மீன்பிடியாளர்களை விட வேறு நூற்றுக்கணக்கான பலரும் அடங்குவார்கள்.

சிறிது சிறிதாக அவர்களின் ஆக்கிரமிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இன்றைய காலகட்டம் மிகப்பொல்லாத காலகட்டமாக மாறியுள்ளது. மிகவேகமாக, மிக உக்கிரமாக ஆக்கிரமிப்பும், வெளியார் குடியேற்றங்களும் இராணுவ உதவியுடன் வடகிழக்கு மாகாணங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டில் இருந்து வந்து நம்மவருக்கு வைத்திய வசதிகளையும் கொடைகளையும் தந்து உதவிக் கொண்டிருக்கும் போது, எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன. வடகிழக்கு என்பது தமிழர் தாயகம் என்ற அந்தக் கருத்திற்கு மாறான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் எல்லோர் மனங்களிலும் பதிய வைக்க விரும்புகின்றேன்.

இன்று எமது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் பிறந்த, தமது முன்னோர் பிறந்த தமிழ் மண்ணை மறவாது உதவ முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க ஒரு விடயம்.

பல அடிப்படை விடயங்களை இத்தருணத்தில் பேசினால் என்ன என்று எனக்குப்படுகிறது. கலவரங்களும் காலத்தின் கோலமும் எங்கள் மக்களைப் புலம்பெயர வைத்தது என்னவோ உண்மைதான். அவ்வாறு சென்றவர்கள் உள்ளகச் சுமைகளுடனேயே வெளிநாடு சென்றார்கள்.

எம்மை நாம் பிறந்த பூமியில் வாழ விடவில்லை எம்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாகுபாட்டுடன் நாம் நடத்தப்பட்டோம். நடைமுறை வாழ்க்கையிலிருந்து நாம் ஒதுக்கி வைக்கப்பட்டோம், என்றெல்லாம் மனம் வெதும்பித்தான் பிறநாடுகள் சென்றார்கள் எம்மவர்கள்.

ஆனால் அவ்வாறு சென்றவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே களத்தை மறவாது திரும்ப வந்து தமது கடப்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

வடகிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். இப்பொழுது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, தமிழரின் முழுமையான தொடர் இடம் என்ற கருத்தை அப்புறப்படுத்த அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .