2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அனைத்து பிரதேச சபைகளுக்கும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் வேண்டும்

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாணத்திலுள்ள 34 பிரதேச சபைகளுக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தேவை அவசியமாகவுள்ளமையினால் அதற்கான காடர் (பணியாற்றுவதற்கான அனுமதி) உருவாக்கி நியமனங்கள் வழங்குவதற்கு வடமாகாண சபையும் உள்ளூராட்சி அமைச்சும் நடவடிக்கை எடுக்கக் கோரி வலி மேற்கு (சங்கானை) பிரதேச சபையில் தீர்மானமொன்று ஏகமனதாக வியாழக்கிழமை (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி.மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் குறிப்பிட்ட தீர்மானத்தை சபைக்கு கொண்டு வந்தார்.
தீர்மானத்தினைக் கொண்டு வந்து நடனேந்திரன் உரையாற்றுகையில்,

'1985 ஆம் ஆண்டின் பிரதேச சபைகளின் சட்டத்தின் கீழ் மின்சாரம் மற்றும் சுகாதாரப் பணிகள் என்பன முழுமையாக பிரதேச சபைகளின் கைகளில் காணப்பட்டது.

தற்போது இந்நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டாலும் சுகாதாரப்பணி என்பது பிரதேச சபைகளின் கைகளிலேயே காணப்படுகின்றது. சுகாதார பரிசோதகர்கள் இன்மையால் உடனடியாக இத்தகைய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதுடன் பிரதேச சபை சுகாதார நடவடிக்கைளை மேற்கொள்ள அடுத்தவர்களை நம்பியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

இத்தகைய நிலைமையில் இருந்து விடுபட்டு பிரதேச சபைகள் சுதந்திரமான முறையில் தமது பிரிவு மக்களின் சுகாதாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, பிரதேச சபைகளில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான பதவிகளை உருவாக்க உள்ளூராட்சி அமைச்சும் வடமாகாண சபையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என அவர் தெரிவித்தார்.

மேற்படி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவருமொக மொத்தம் 14 உறுப்பினர்கள் இருப்பதுடன், சபை அமர்விற்கு வருகை தந்த 13 உறுப்பினர்களும் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .