2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தமிழ் - முஸ்லிம்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும்

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'முஸ்லிம் தரப்புக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தரப்புக்களுடன் கைகோர்த்து சர்வதேச சமூகத்தை சரியான முறையில் கையாண்டு தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து எங்களுடைய உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளக்கூடிய வகையிலே இலங்கையில் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

'தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஒன்றிணைந்து இன்று இருக்கக் கூடிய சர்வதேச சூழலை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

தென்பகுதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து வெள்ளிக்கிழமை (20) யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடத்தியிருந்தன.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

'கடந்த 30, 40 ஆண்டுகளாக தமிழ்மக்கள் மிக கொடுமையான இனவழிப்புக்களை சந்தித்துள்ளார்கள். தமிழ் மக்கள் இந்த சிங்களப் பேரினவாத கும்பலிடம் இருந்து தம்மை பாதுகாக்க ஓடி அலைந்தார்கள். எவ்வளவு துன்பம் அடைந்தார்கள் என்பதை அனுபவத்தினூடாகப் பார்த்துள்ளோம்.

எங்களுக்கு எதிராக இனவழிப்பை மேற்கொள்ளும் போது முஸ்லிம் சகோதரர்களை எங்களுக்கு எதிரானவர்களாகவும் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து, தங்களுடைய இனவழிப்பு செயலை மேற்கொள்வதற்காக கடந்த காலங்களில் சிங்களப் பேரினவாத அரசுகள் முயற்சி மேற்கொண்டன.

தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை தடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதன் பரிமாண வளர்ச்சிதான் தமிழீழ விடுதலைப்புலிகள்.
அந்த நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என முத்திரை குத்தி விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம், பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையிலே தமிழ் மக்களில் பல இலட்சக் கணக்கானவர்களை, சிங்கள பௌத்த பேரினவாத அரசு அழித்தொழித்துள்ளது.

முதலிலே பலமாக இருந்த தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து பின்னர் தமிழர்களை அழித்து விட்டு, தற்போது முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் மீது கைவைக்க தொடங்கியுள்ளார்கள்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் மட்டும் எந்தவொரு தீர்வும் கிடைத்து விடப்போவதில்லை. எங்களுக்குள்ளே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய களமாக இது இருக்கலாம். ஆனால் நிரந்தரமான இந்த அழிவில் இருந்து தப்ப வேண்டுமானால், இன்று இருக்கக்கூடிய இந்த சர்வதேச சூழலைப் பயன்படுத்தி அரசுக்கு வால் பிடிக்கின்ற முஸ்லிம் தலைமைகள் அங்கிருந்து வெளியேறி வந்து தமிழ் முஸ்லீம் தரப்புக்கள் ஒன்றாக இருந்து சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்த்தத்துடன் சமதரப்பு என்றவாறு பேசி நாங்கள் எங்கள் உரிமைகளைப் பெற்று கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நேற்று (19) ஜனாதிபதியிடம் நியாயம் கேட்க சென்ற போது அவர் கடுமையாக வாங்கி கட்டியதாக அதற்கு பின்னரும் அவர் அவர்களோடு ஒட்டிக்கொண்டு இருக்க போகின்றாரா? அல்லது துணிந்து வெளியே வந்து முதுகெழும்பை நிமிர்த்திக்கொண்டு அந்த மக்களுக்கு நீதியான தலைமைத்துவத்தை வழங்க போகின்றாரா? என பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .