2025 ஜூலை 05, சனிக்கிழமை

குடாநாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயாவிளான் குட்டியபுலம் விவசாயிகளினது பிரச்சினைகள் மட்டுமல்லாது குடாநாட்டு விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வு பெற்றுத் தரப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் குட்டியபுலம் அம்பாள் சனசமூக நிலைய பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அப்பகுதி விவசாயிகள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு உற்பத்திகளை அறுவடை செய்த பின்னர் அவற்றை சந்தைப்படுத்துவதில் தாம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக தாம் விதைகளை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்து அவற்றை நடுகை செய்து உற்பத்திகளை அறுவடை செய்த பின்னர் அவற்றை உரிய விலையில் சந்தைப்படுத்த முடியாத காரணத்தினால், தாம் வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாது கடன்தொல்லைகளால் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் விவசாயப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வயாவிளான் குட்டியபுலம் விவசாயிகள் மட்டுமல்லாது குடாநாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

இதனிடையே விவசாயிகளின் நலன்கருதி விரைவில் விவசாயிகளது பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காணும் முகமாக மாநாடொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எமது கைகளில் மாகாணசபை கிடைத்திருந்தால் அதனூடாக இங்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கைகளில் கிடைக்கப் பெற்றதால் அவர்கள் பல நொண்டிச்சாட்டுக்களை கூறி அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்காமல் இருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாது அதன் மூலமாக தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதையே விரும்புகின்றனர். ஆனால் நாம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வு காண்பதையே கருத்தில் கொண்டு அதற்காக குரல் கொடுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம்.

இதன் ஒரு கட்டமாகவே யாழ். கிளிநொச்சி இரணைமடு குடிநீர்த் திட்டத்தை நாம் ஆதரித்துவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்திற்காக இத்திட்டத்தை திட்டமிட்டு தடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே குட்டியபுலம் பகுதியிலுள்ள அம்பாள் சனசமூக நிலையத்தை மீளவும் புனரமைத்து அதனை இயங்க வைப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், ஈ.பி.டி.பியின் தெல்லிப்பழை இணைப்பாளர் ஜெயபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .