2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்வி, விளையாட்டுத்துறைகளை மேம்படுத்த டக்ளஸ் நடவடிக்கை

Super User   / 2014 ஜூலை 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.மத்திய கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (10) நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் கல்லூரியின் பழைய மாணவர் கூடைப்பந்தாட்ட அணியினர், கல்லூரி அபிவிருத்தி சபை பிரதிநிதிகளுடன் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, கல்லூரி வளாகத்தில் உள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்தை கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் பயன்படுத்தும் அதேவேளை, மாவட்ட கூடைப்பந்தாட்ட வீரர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மைதானம் தொடர்பில் கல்லூரி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்பிரகாரம் கல்லூரியின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்து ஒரு ஒழுங்கமைப்புக்குள் மைதானத்தை உரிய முறையில் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

அடுத்து மஹிந்தோதய தொழில்நுட்ப பாடநெறிகளை மத்திய கல்லூரியிலும் ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சரிடம் கல்லூரி சமூகம் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக கல்வியமைச்சர் ஊடாக கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த வருடமே இப்பீடத்திற்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே கல்லூரியின் மைதானத்தை இராணுவத்தினரது உதவியைப் பெற்று நவீனமுறையில் புனரமைப்பதற்கும் கல்லூரி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கும் முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர், அடுத்து மைதானத்தில் வீரர்கள் உடைமாற்றும் அறை மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்துவதற்கம் பார்வையாளர் அரங்கை கட்டுவதற்குமான நடவடிக்கைகள் உரிய காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

மைதான புனரமைப்பின் போது வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஊடாக எரிபொருளை வழங்குவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், கல்லூரியின் கீதம் மாணவர்களால் ஆங்கில மொழியில் இசைக்கப்படும் போது அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இதனிடையே கடமைநேரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட கல்லூரியின் முன்னாள் அதிபர் காலம் சென்ற அமரர் இராஜதுரைக்கு சிலை வைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கல்லூரி அதிபர் எழில்வேந்தன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் தமிழழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X