2025 ஜூலை 05, சனிக்கிழமை

வன்னேரிக்குளத்தை பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்த தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா, நா.நவரத்தினராசா

வடமாகாண சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயப் பிரதேசமென சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்ற போது, சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயமென சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தி பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்து வெகு விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

இதனூடாக போரினால் பாதிக்கப்பட்டு உள நெருக்கடிகளுக்கு உள்ளான மக்களை ஆற்றுப்படுத்துவதுடன், உள்ளூர் சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்ய முடியும் என அவர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கையினை வடமாகாண சபை விரைந்து எடுக்கவேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இந்த பிரேரணை, சபை உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைவிட, பசுபதிப்பிள்ளையினால் கொண்டுவரப்பட்ட மேலும் 2 பிரேரணைகளும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கு ஊக்குவித்தல், அக்கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர்கள் கல்வி போதிக்கின்றமையினை உறுதிப்படுத்தல், கணினி கற்பிக்கும் நிலையங்களைத் தரமுள்ளதாக்கி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கேற்ற சான்றிதழ்களை வழங்குதல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாகவுள்ள சிறுவர் பூங்காவினை கரைச்சிப் பிரதேச சபையிடம் கையளிப்பதற்கு, உள்ளுராட்சி, கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்துறை, சமூகநலன் மற்றும் காணி அமைச்சர் என்ற வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .