2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கண்டனக் கூட்டமாக நடத்தப்பட்ட யாழ். போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடத்தப்படவிருந்த போராட்டம், நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கண்டனக்கூட்டமாக நடத்தப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்துதல், மற்றும் காணாமற்போனோரை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தையடுத்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளிப்பதற்காக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரையில் பேரணியாகச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த போராட்டத்தையும் பேரணியையும் நடத்தவிட வேண்டாம் என வலியுறுத்தி 12 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றதாக யாழ். பொலிஸார் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.

அத்துடன் பேரணி காரணமாக அசம்பாவிதங்கள் இடம்பெறலாமெனவும் பொலிஸாரினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இவற்றை கவனத்திற்கொண்ட யாழ். நீதிமன்றம், குறித்த பேரணியினை நடத்துவதற்கு தடை விதித்தது.

இதனால், இன்று போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் ஒன்றினை நடத்தினர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியில் பிரதிநிதி பாஸ்கரா, வடமாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்புச் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வடக்கு - கிழக்கு இணைப்பாளர் அன்ரன் ஜேசுதாஸன், 'வடக்கு - தெற்கு மக்கள் இணைந்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடத்தவிருந்த போராட்டம்  திட்டமிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக' கூறினார்.

'இந்த போராட்டத்தில் வடக்கு மக்களுடன் இணைந்து தெற்கு மக்களும் கலந்துகொள்ளவிருந்தனர். இந்நிலையில் இப்போராட்டத்தினை நடத்தவேண்டாம் என நீதிமன்றத்தினூடாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களும் இணைந்து போராட்டம் செய்வதினால் போராட்டத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்றும் அதனால் தடை விதிக்கும்படி பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

வடக்கும் தெற்கும் இணைந்து செயற்படவேண்டும் எனக்கோருபவர்கள், வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்காக தெற்கு மக்கள் இணைந்து போராடுவதைத் தடை செய்கின்றனர். இது எந்த வகையில் நியாயமானது என அவர் கேள்வியெழுப்பினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .