2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சிதறடிக்கக் கூடாது: ராஜபக்ஷ

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, பொ.சோபிகா


நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்கு இளைஞர்கள் செயற்பட வேண்டும் என தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாகப் பணிப்பாளர் மலிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

கம்பஹாவில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணி மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் அவ்வணியினரை அநாகரீகமான முறையில் நடத்தியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், யாழ். மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல், யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
 
நாம் இங்கு வந்ததற்கான நோக்கம் இளைஞர்களுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிகழ்வு சம்பந்தமாக கலந்துரையாடி அவர்களுடைய கருத்தை கேட்டு அறிவதற்காகவே.

இச்சம்பவம் தொடர்பாக நான் மிகுந்த மனவேதனை அடைகின்றேன். விளையாட்டுகளில் முரண்பாடுகள் வருவது சாதாரண விடயம், ஆனால் மதத்தையோ, இனத்தையோ புண்படுத்தி கூறியிருந்தால் அது குற்றம் ஆகும்.

இப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உள்ளது. இன, மொழி சார்ந்த வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த விடயத்தில் இனி யார் பிழை செய்தாலும் மன்னிக்கமாட்டோம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்தப் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலமும் பெற்று தலைவர்களிடமும் அலுவலர்களிடமும் கலந்தாலோசித்துள்ளோம். வெகுவிரைவில் இப்பிரச்சினைக்கு நீதிப் பிரிவின் ஊடாக தீர்வு வரும்.
 
அண்மையில் இது தொடர்பாக பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்களுடன் ஒருபக்கம் சார்ந்த செய்திகள் வெளியாகின. இதுவரை காலமும் நாம் கட்டியெழுப்பி வேலைத்திட்டத்தை ஒற்றுமையுடன் நாம் செயற்படுத்த வேண்டும்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் உரையாடி உங்களுடன் இதுவரை கட்டியெழுப்பிய சமாதானத்தை நீங்கள் சிதைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளேன்' என்று அவர் மேலும் கூறினார்.

எனவே இளைஞர்களாகிய நீங்களும் இதை சுமூகமான முறையில் தீர்பதற்கு அனைவரும் சமாதானமாக செயற்பட வேண்டும். பெரிதுபடுத்தி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சிதறடிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில், யாழ் மாவட்ட தேசிய இளைஞர் மன்ற தலைவர் செ.விஜிதரன், தேசிய இளைஞர் சம்மேளன செயலாளர் சமன் குமார றணவீர, யாழ்.மாவட்ட இளைஞர் சேவை பணிப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மென்பந்தாட்டத் துடுப்பாட்டப் போட்டியின், காலிறுதிப் போட்டியில், யாழ்.மாவட்ட அணி வீரர்கள் மீது, அம்பாந்தோட்டை மாவட்ட அணி வீரர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன், அநாகரீகமாக நடந்து கொண்டு, 'யாழ்ப்பாணத்து நாய்களே ஓடுங்கள்' என்ற சொற் பதத்தினை பயன்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருந்ததுடன், அண்மையில் இடம்பெற்ற 9 ஆவது இளைஞர் மாநாட்டு அமர்வினையும் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .