2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மேர்வினுக்கு தெரியாது'

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா, எம்.றொசாந்த்

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. ஆலயத்திற்குள் மட்டும் தான் சப்பாத்துடன் செல்லக்கூடாது என அவர் அறிந்திருந்தார் என்று யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் செல்பவர்களைக் கவனிக்காமல், மேர்வின் சில்வா ஆலய வளாகத்தில் சப்பாத்துக்களுடன் சென்றிருந்ததினைக் கவனித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நல்லூருக்கு விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, சப்பாத்துடன் ஆலய வாயில் வரையில் சென்று சுவாமி தரிசனம் செய்தமை தொடர்பில் பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

'ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என்று அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. ஆலயத்திற்குள் மட்டும் தான் செல்லக்கூடாது என அவர் அறிந்திருந்தார்.

ஆனால், நல்லூர் ஆலய உற்சவத்தில் ஆலய வளாகத்திலும் காலணிகளுடன் செல்லக்கூடாது என்ற நடைமுறை இருக்கின்றது. சப்பாத்துக்களுடன் மேர்வின் சில்வாவினைக் கண்டதும், ஓடிச் சென்று இது தொடர்பில் அவருக்கு விளக்கினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், இவ்விடயத்தினைப் பெரிதுபடுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தும் ஊடகங்கள் ஒன்றினை மட்டும் கவனிக்கவில்லை. நல்லூர் ஆலயத்திற்கு கலாசார உடையணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் குட்டைப் பாவடைகளுடன் பெண்கள் செல்கின்றனர். இதனை நான் அவதானித்துள்ளேன். மேர்வின் சப்பாத்துப் போட்டுச் செல்வதினை அவதானித்த ஊடகங்கள் குட்டைப் பாவாடையும் அவதானிக்க வேண்டும்.

ஒத்துழைப்பு தந்தால் வாள்வெட்டுக்களை நிறுத்தலாம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் இரு வாரங்களில் அவற்றினை இல்லாமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸாரால்  மேற்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கினால், அச்சம்பவங்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

சைவமாக மாறிய பொலிஸார்

யாழ்ப்பாண, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார், மரக்கறி உணவுகளை மட்டும் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வருகின்றனர்.

நல்லூர் ஆலய உற்சவ காலத்தில், அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகின்றமை என்ற வழமைக்காக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரும் அசைவ உணவுகள் உண்ணாமல் சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றனர்.

இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸாருக்கு சைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை. அத்துடன், பொலிஸார் அசைவ உணவுகள் உண்ணாமல் இருப்பதில்லை. அவ்வாறு இருந்தும், நல்லூர் ஆலயத்திற்கு கடமை செய்வதற்காக பொலிஸார் சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றனர்.

நல்லூர் ஆலய உற்சவத்திற்கு யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும், கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாருமாக 600இற்கும் மேற்பட்டவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமுறை மாற்றிக்கூறும் பொலிஸார் மீது நடவடிக்கை

அடிக்கொருமுறை நடைமுறைகளை மாற்றிக்கூறி மக்களைக் குழப்பும் போக்குவரத்துப் பொலிஸார் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துப் பொலிஸாரிற்கு விதிமுறைகள் தொடர்பான போதியளவு பயிற்சிகளும், அறிவூட்டல் நடவடிக்கைகளும் பொலிஸ் திணைக்களத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நடக்க வேண்டும்.

அவற்றினை மீறி மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடும், பொலிஸார் தொடர்பில், பொதுமக்கள் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்.மாவட்டத்தில் 268 பேர் கைது

யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடை 268 பேர் கடந்த இரண்டு வாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடித்து காயப்படுத்தியது தொடர்பாக 66 பேரும், பொது இடத்தில் கலகம் விளைவித்ததாக 4 பேரும், அனுமதிப்பத்திரமின்றி மதுவிற்பனை செய்தது தொடர்பாக 13 பேரும், சந்தேகத்தின் பேரில் 38 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 30 பேரும், பாரிய குற்றங்களுக்காக 10 பேரும், வீதி விபத்து ஏற்படுத்திய 5 பேரும், திருட்டு சம்பந்தமாக ஒருவரும், பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்த ஒருவரும், பாலியல் குற்றம் தொடர்பாக ஒருவரும், வீட்டினுள் அத்துமீறி நுளைந்த குற்றம் தொடர்பாக 10 பேரும், பொது இடங்களில் மதுபானம் அருந்தியமை தொடர்பாக 7 பேரும், சட்ட விரோத கருக்கலைப்பு சம்பந்தமாக ஒருவரையும், குடிபோதையில் வாகனம் செலுத்தியது சம்பந்தமாக 3 பேரும் ஏனைய குற்றங்களுக்காக 78 பேரும் என மொத்தமாக 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .