2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களை மன்றில் ஆஜர்படுத்த முடியாது: பொலிஸ்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, எம்.றொசாந்த், பொ.சோபிகா

யாழ். காரைநகர் ஊரிப்பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் ஆஜர்படுத்த முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி சிறுமி துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், விடுமுறையில் சென்றிருந்த கடற்படைச் சிப்பாய்கள் இருவரையும் மன்றில் ஆஜர்படுத்தும்படி நாங்கள் மன்றில் கோரியிருந்தோம். 

ஆனால், அதற்கு கடற்படை சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி மறுத்துள்ளார்.

'சிறுமி அளித்துள்ள  வாக்குமூலத்தில் ஜூலை 15ஆம் திகதி தன்னைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்தவரே, முன்னரும் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும், ஆனால், மேற்படி 2 கடற்படைச் சிப்பாய்களும் ஜூலை 14ஆம் திகதி விடுமுறையில் சென்றுள்ளனர். ஆகையால் அவர்களை மன்றில் ஆஜர்படுத்த வேண்டிய தேவையில்லையென கடற்படை சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி, மன்றில் தெரிவித்திருந்தார்.

அதனை சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால், விடுமுறையில் சென்ற கடற்படைச் சிப்பாய்களினை ஆஜர்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக விமலசேன மேலும் தெரிவித்தார்.

மேற்படி சிறுமி துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், காரைநகர் ஏலாரைக் கடற்படை முகாமினைச் சேர்ந்த 7 கடற்படைச் சிப்பாய்கள், சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதவானினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி சிறுமி தனது வாக்குமூலத்தில் தன்னை மேற்படி கடற்படை முகாமினைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் 11 தினங்கள் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .