2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆளுநருக்கு ஆளுமை இல்லையா அல்லது இனக்குரோதமா?

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன் 

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியம் சட்ட மூலம் ஆளுநரால் நிராகரிப்பானது, ஆளுநரின் ஆளுமை இன்மையா அல்லது இனக்குரோதமா என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வடமாகாண சபையில் கடந்த 5 ஆம் திகதி அமர்வில் வடமாகாண சபையினால், உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இது தொடர்பில் சர்வேஸ்வரன் வெள்ளிக்கிழமை (08) விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வடக்கு மாகாண நிதி நியதிச் சட்டம், முத்திரை கைமாற்று நியதிச்சட்டம், முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் ஆகிய மூன்றுமே நிறைவேற்றப்பட்டன.

முதல் இரண்டு சட்டங்களும் ஏகமனதாக நிறைவேறிய அதேவேளை முதலமைச்சர் நிதி நியதிச் சட்டத்திற்கு சபையில் பிரசன்னமாகியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் மூவர் நடுநிலை வகித்தனர்.

இம்மூன்று சட்ட மூலங்களும் கடந்த யூன் மாதம் ஆளுநரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இம்மூன்றுமே ஏனைய மாகாணங்களில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் என்பதுடன் அவற்றை அடியொற்றியே வரையப்பட்டவையாகும். 

எனினும் இதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்ட ஆளுநர் நிதி நியதிச் சட்ட மூலத்தினை பல்வேறு திருத்தங்களுடன் அங்கீகரித்த அதேவேளை முத்திரை வரிச்சட்டத்தை முழமையாக அங்கீகரித்திருந்தார். முதலமைச்சர் நிதிய சட்ட மூலத்தினை ஏற்புடையதல்ல என நிராகரித்திருந்தார்.

நிதி நியதி சட்டமூத்தில் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமாகவும், இன்னொரு வகையில் நோக்கின் குறுகிய இனவாத அடிப்படையிலானதாகவும் நோக்கலாம். அத்திருத்தங்கள் நிதி நியதிச் சட்டத்தினுடைய உள்ளடக்கம் நோக்கம் ஆகியவற்றை அதிகம் பாதிக்காது என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் அத்திருத்தங்கள் ஒவ்வொன்றும் எத்தகைய உள்நோக்கத்தை கொண்டது என்பதையும் அது சட்டதிற்கு அவசியமான பரந்த பரப்பளவை மறுதலிக்கின்றது என்ற வகையில் இத்திருத்தங்கள் இச்சட்டத்தை எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது என்பதையும் சபையின் கருத்தாக குறிப்பிட்டு அவரது கையெழுத்திற்காக அனுப்புவதாக சபை தீர்மானித்தது. 

இத்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்பதற்கான காரணங்களை சபை விளக்கி அதனை நிறைவேற்றி ஆளுநரின் கையொப்பத்திற்கு அனுப்பும் பட்சத்தில் மாகாணசபையின் செயற்பாடுகளை முடிந்தவரை முடக்குவதை நோக்கமாக கொண்ட ஆளுநர், சபைத்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாமையை சாதகமாகப் பயன்படுத்தி அதனை ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு அல்லது கவனத்திற்கு அனுப்புவதன் ஊடாக மேலும் சில மாதங்களை கடத்த முடியும் என்பதனாலேயே திருத்தம் அவசியமற்றது என்ற எமது விளக்கத்துடன் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
முதலமைச்சர் நிதியம் என்பது வேறெந்த மாகாணங்களையும் விட போரினால் பாரிய அளவிற்கு பல்வேறு வகையான அழிகளையும் அனர்த்தங்களையும் சந்தித்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு அவசியமாகும். போரினால் அவயவங்களை இழந்தவர்கள், வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் குறிப்பாக பெண் தலைமை குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழக் கூடிய உயர்கல்வி அல்லது தொழிற் கல்விகளை பெறுவதற்கு பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு உதவுதல், உயிர் அபாய நோய்களைக் கொண்ட ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ செலவிற்கு உதவுதல், இயற்கை அனர்த்தம் மற்றும் மனித அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வளித்தல் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முதல்வர் நிதி அவசியமாகின்றது. 

இத்தேவைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவிற்கு எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். மேலும், களத்தில் வாழும் இத்தகைய மக்களுக்கு உதவ விரும்புகின்ற இந்நாட்டு மக்களும் சரி, புலம்பெயர் மக்களும் தமிழ் மக்களும் சரி இந்நிதியத்தினூடாக தமது சேவைகளை செய்ய முடியும்.
மேற்கண்ட வகையிலான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புகின்ற புலம்பெயர் உறவுகள் இத்தகைய சட்ட ரீதயான அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பினை நீண்ட காலமாக எதிர்ப்பார்;த்திருந்தனர். 

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற இந்நிதியமானது கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு 1989 இல் இத்தகைய நிதியம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதனால் இந்நிதியத்தை புத்துயிர் அளித்து செயற்படுத்த முடியாது என்பதனாலேயே வடக்கிற்கு புதிய முதலமைச்சர் நிதிய சட்டம் தேவைப்பட்டது. 

இத்தகைய வடக்கு மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தினை ஆதரிக்க முடியாமற் போனதற்கு எதிர்க்கட்சி தலைவர் கூறிய விளக்கம் மக்கள் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி ஆளுநர் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்துவதைத் தவிர வேறல்ல. ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு அவருடன் ஒரு இறுக்கமான நிலையை தோற்றுவித்திருப்பதால் முதல்வர் நிதிய சட்டத்தை ஆதரிக்க முடியாது என்பதே அவரது கருத்தாகும். இக்கருத்தானது அறிவுபூர்வமாகவோ, மக்கள் நலன் அடிப்படையிலோ அல்லது ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலோ ஏற்புடையதாக இல்லை.

மாகாணசபை சட்டங்களின் படி முதலமைச்சர் நிதியம் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆளுநரின் அங்கீகாரம் பெறவேண்டுமென்ற அவசியம் கிடையாது.

எனினும் மாகாணசபை அமைச்சரவை நடவடிக்கைகளுக்கு தடைபோடும் போக்கைக் கொண்ட ஆளுநர் இதனை அறிந்துக் கொள்வதன் மூலம் ஆளுநருக்கு இதனை அறிவிப்பதன் மூலம் நாம் அதனை நிறைவேற்றுவதற்கு எழக்கூடிய தடைகளை முன்னதாகவே நீக்குவதை நோக்கமாகக் கொண்டே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இது அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அடிப்படையில் அதனை அறிவித்ததற்கு நன்றி கூறி பதிலளித்திருக்க வேண்டும். மாறாக இத்தகைய நிதியத்தினை உருவாக்க முடியாதென ஆளுநர் நிராகரித்திருந்தார். 

மாகாணசபை சட்டங்களின் படி இரண்டு நிதியமே இருக்க முடியும். ஒன்று மாகாணசபை நிதி மற்றையது அவசர கால நிதி. இது தவிர்ந்த மூன்றாவது நிதியத்திற்கு சட்டத்தில் இடம் இல்லை என காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு மாகாணத்தில் ஆளுநர் நம்பிக்கை நிதியத்தை ஆளுநர் உருவாக்கியிருக்கின்றார்;. இதற்கு மாகாணசபை சட்டத்தில் எங்கே இடமிருந்தது என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். ஆளுநர் நிதியத்திற்கு சட்டத்தில் இடமிருக்குமானால் முதலமைச்சர் நிதியத்தை நிராகரித்தற்கு சொல்லப்பட்ட காரணம் சிறுபிள்ளைத்தனமானது.

ஆளுநரின் இந்த நிராகரிப்பானது ஆளுநரின் ஆளுமையை ஒருபுறம் நகைப்பிற்கிடமாக்குவதுடன், மறுபுறம் வடக்கின் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசு மக்களுக்கு பயனுள்ள வகையில் செயற்படக் கூடாதென்ற குறுகிய அரசியல் உள்நோக்கத்தை கொண்டதாகவே புலப்படுகின்றது. ஏற்கெனவே கூறியது போல் 1989 இல் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இத்தகைய நிதியம் உருவாக்கப்பட்டிருந்தது. 

இன்று 5 மாகாணங்களில் முதலமைச்சர் நிதியம் நடைமுறையில் இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளாக ஆளுநராக இருக்கின்ற ஒருவருக்கு அவர் எவ்வளவுதான் பாமரனாக இருந்தாலும் இத்தனை ஆண்டு கால அனுபவமும், பட்டறிவும் முதல்வர் நிதியம் தொடர்பாக தனக்கு சட்ட வலு இல்லை என்பதையும்  பல மாகாணங்களில் முதலமைச்சர் நிதியம் இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் போதுமானதாகும் ஆனால், வடக்கு மாகாணத்திற்கு முதலமைச்சர் நிதியம் ஏற்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என நிராகரித்திருக்கின்றார் என்றால் ஆளுநரின் ஆளுமையின்மையை வெளிப்படுத்துகின்றதா? அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான துவேசத்தை வெளிப்படுத்துகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

இவ்விரண்டுமே அவரது பதிலில் வெளிப்பட்டிருக்கின்றது. ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருப்பருக்கு ஆளுமை இருக்க வேண்டும். இனக்குரோதம் இருக்கக்கூடாது. ஆனால் ஆளுநருக்கு அவசியமான இவ்விரண்டு பண்புகளுக்கும் முரணான பண்புகளைகட கொண்ட இவ்வாளுனரை நீக்கி ஆளுமையுள்ள, இனக்குரோதமற்ற ஆளுநரை நியமிக்க ஜனாதிபதி நடடிக்கை எடுக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .