2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆயுதக் கலாசாரம் படமெடுத்து ஆடுகிறது: சி.வி.

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுதக் கலாசாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (09) மாலை நடைபெற்றது. இதில்  உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எமது தமிழ் பேசும் சமுதாயமானது பாரிய சமூக மாற்றத்தினுள் அகப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.  என்னைப் போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு அது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. எமது இளமை நாட்களில் நாம் இலங்கையெங்கும் சென்று வந்தோம். உதாரணத்துக்கு திஸ்ஸமகாராம என்ற தென்பகுதிக் கிராமத்திலிருந்த வயல் நிலங்களில் பெரும்பான்மையானவை தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தன.

அங்கு வசிக்கையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தனர் அவர்கள். அத்துடன், போதிய வருமானமும் பெற்றனர். சிங்கள மக்களுடன் மிகவும் சுமுகமான உறவை வைத்திருந்தனர். சரளமாக சிங்களம் பேசினர். சிங்கள மக்கள் பலருக்கு பலவித உதவிகளைச் செய்தனர். 1958ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் அவர்கள் யாவரும் வட கிழக்கை நோக்கிப் பயணிக்க நேர்ந்தது. பலரின் காணிகள் இன்னும் அவர்களின் பெயர்களில் இன்றும் உள்ளன. ஆனால், வேற்றார் ஆக்கிரமித்து விட்டார்கள். படிப்படியாக நாடெங்கும் பரந்து வாழ்ந்த தமிழ் பேசும் சமூகம், முள்ளிவாய்க்காலுக்கு மக்கள் போரின் கடைசிக் கட்டத்தில் தள்ளப்பட்டது போன்று, வடக்கு கிழக்குக்கு தள்ளப்பட்டனர். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர்;.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் இருக்கி;றோம். போரைச் சாட்டாக வைத்து வட கிழக்கை பலவிதத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது.

பயத்தின் காரணத்தால், மக்கள் ஆயுதம் ஏந்தியவர்களை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.
முதியோர் பராமரிப்பு என்பது மூத்த பிரஜைகளின் தனித்துவ தேவைகளை தேர்ந்தறிந்து அவற்றை பூர்த்தி செய்வதாகும். அதில் ஒரு முக்கிய பங்கை வகிப்பது யாதெனில் அம்முதியோரின் மனோநிலையாகும். மதிப்புடன் முதுமை அடைவதையே யாவரும் விரும்புகின்றனர். அவர்களை ஏனோ தானோ என்று நடத்தினால் அவர்கள் மனங்கள் புண்படும். ஒவ்வொருவரையும் மாண்புடன் மதிப்புடன் நடத்துவது என்பது கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர்களை  நடத்தும்போதே மூத்த பிரஜைகளின் மனங்கள் குளிர்கின்றன.

இன்று உலகத்தில் முதியோர் தொகை அதிகரித்து வருகின்றது. காரணம் எமது வைத்திய சேவைகள் பலவிதத்திலும் எம்மைக் காப்பாற்றி நீண்ட ஆயுளை ஊர்ஜிதப்படுத்துகின்றது. உதாரணத்துக்கு நவீன மாற்றுவழி இணைப்புச் சத்திர சிகிச்சையானது  அவ்வாறான அறுவை மருத்துவத்தின் பின்னர் ஒரு மனிதனை பல வருடங்கள் இளமை எய்தியவராக இருந்து வாழ வழி வகுக்கின்றது. மேலைநாடுகளில் மேற்படி சத்திர சிகிச்சைகள் பலதின் பின்னர் மலையேறுவோரும் உள்ளனர்.

முதுமை என்பது எங்கள் எல்லோரையும் தீண்டப்போகும் ஒரு நிச்சயமான சம்பவம். என்னைப் போன்றோரை அது ஏற்கெனவே தீண்டிவிட்டது. எனினும் அதிலிருந்து யாரும்; தப்பமுடியாது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதேநேரம் முதுமை அடைவோரை பாதுகாக்கலாம், பராமரிக்கலாம், மதிப்போடு வாழச் செய்யலாம். சுமார் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எமது குடும்ப வயோதிபர்களை கட்டாயமாக நாங்களே பராமரித்து வந்தோம். ஏதாவது ஒரு இல்லத்தில் அவர்களை இட்டு வைப்பது என்றால் இழிவான ஒரு செயல் என்று நாங்கள் கூறி வந்தோம். இன்றும் பெரும்பாலும் அந்த மனோநிலையிலேயே உள்ளோம்.

என்றாலும், இன்று காலம் மாறிவிட்டது. கொழும்பு போன்ற நகரங்களில் பிள்ளைகள் யாவரும் வேலைக்குப் போகின்றனர். குழந்தைகள் பாடசாலை செல்கின்றனர்;. முதியோரை பராமரிப்பது முடியாத காரியமாகச் சிலருக்குப் படுகின்றது. எனவே, முதியோர் இல்லங்களில் தமது தாய், தந்தையரை அவர்கள் சேர்த்து விடுகின்றனர்.

வடமாகாணத்தில் அதுதான் காரணம் என்று கூற முடியாது. ஆனால், பலர் தமது உற்றார், உறவினர்களை போரின் தாக்கத்தால் இழந்த நிலையில் உள்ளனர்;. இருக்க இடம் இருந்தும் இயல்பாக பேசிப் பழக இல்லத்தார் எவரும் இன்றித் தவிக்கின்றனர். சிலருக்கு இல்லத்தில் உற்றார், உறவினர் இருந்தும் அதே கதிதான். இன்முகத்துடன் சிரித்துப் பேச முடியாத நிலை.

இவற்றையெல்லாம் மனதில் எடுத்துத்தான் பராமரிப்பு இல்லத்தை உருவாக்காமல், பகிர்ந்துகொள்ளும் ஒரு இல்லமாக இந்த இல்லத்தை ஆக்கியுள்ளனர். இதைத்; ஸ்தாபித்த அன்பர் என்று நம்புகின்றேன். அதாவது தமது ஏக்கங்களைத், தாக்கங்களை, எதிர்பார்ப்புக்களை, அனுபவங்களை எல்லாம் தமது வயதொற்றிய மற்றையோருடன் கூடியிருந்து குசலம் விசாரித்துக் கூறிக்கொள்வதற்கு ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .