2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீர் வழங்கும் அமைப்புக்களை பதிவு செய்யுமாறு அறிவிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாணத்தில் கடும் வறட்சி நிலவுவதால், உள்ளூராட்சிமன்றங்கள், பிரதேச செயலகங்கள், பொதுஅமைப்புகள் மற்றும் இராணுவத்தினர் நீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நீர் விநியோகத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் அமைப்புகள் யாவும் தங்களது விபரங்களை சேவையில் ஈடுபடும் பகுதிகளை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தற்போது நிலவும் வறட்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல், புதன்கிழமை (13) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நீர் வழங்கும் சேவையில் எத்தனை நிறுவனங்கள் ஈடுபடுகின்றன, எங்கு நீரை விநியோகிக்கின்றன, எத்தனை கிணறுகள் இத்தகைய சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு கிணற்றிலிருந்து எத்தனை தடவைகள் நீர் இறைக்கப்படுகின்றன என்ற புள்ளிவிபரங்கள் இதுவரையில் இல்லாததால் நீர் விநியோகத்தை சரியான முறையில் ஒழுங்கு செய்யமுடியாமல் இருப்பதாக விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ஒரே கிணற்றை தொடர்ச்சியாக நீர் விநியோகத்துக்குப் பயன்படுத்துவதால் இருக்கின்ற நன்னீரும் உவர் நீராக மாறுவதற்கான அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்தே நீர் வழங்கும் சேவையில் ஈடுபடும் அமைப்புகள் யாவும் உள்ளூராட்சி மன்றங்களில் தங்கள் பெயர் விபரங்களை உடனடியாகப் பதிவு செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் தற்போது மேற்கொண்டு வரும் நீர் வழங்கல் சேவையை மேலும் விரிவுபடுத்த விரும்பினால், மாகாண விவசாய அமைச்சினூடாக பவுசர்கள் மூலம் நீர் வழங்கும் ஏற்பாடுகளைச் செய்து தரமுடியும் என விவசாய அமைச்சர் தெரிவித்ததையடுத்து, பிரதேச சபைகள் இரண்டொரு தினங்களுக்குள்ளாகத் தங்கள் தேவைகள் தொடர்பாக உள்ளூராட்சித்திணைக்களத்தின் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றங்கள் நீர் விநியோகத்தைச் சீராக மேற்கொள்வதற்குத் தேவைப்படும் செலவு விபரங்களைப் பட்;டியலிட்டு ஏற்கனவே உள்ளூராட்சி ஆணையாளரிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்தத் தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவிடம் இருந்து பெறுவதற்குக் கோரிக்கை விடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்தீன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜெகூ, உள்ளூராட்சித்திணைக்களப் பிரதி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல், சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப்பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார், விவசாய அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா ஆகியோரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சிச்சபைகளின் தவிசாளர்களும் செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X