2025 ஜூலை 09, புதன்கிழமை

வடக்கில் திட்டமிட்ட கலாசார சீரழிவு: மாவை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வடக்கில், திட்டமிட்ட கலாசார சீரழிவு மேற்கொள்ளப்படுகிறது. எமது இளைஞர், யுவதிகள் வேண்டுமென்றே சீரழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டியது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தார்.

மானிப்பாய் தொகுதி கிளை நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் கூட்டம், உடுவில் பிரதேச சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'எமது கட்சியில் மேலும் பல புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பாக பல இளைஞர்கள் கட்சியில் இணைந்துகொள்கின்றனர். அவர்களை முழுமையாக உள்வாங்க வேண்டும் என்பதுடன் அதிகளவிலான பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் 40 சதவீதமான இளைஞர்கள், தேர்தலில் போட்டியிட நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள்.

எமது கட்சிக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது மக்களும் எமது விடுதலைப் பயணமும் ஆகும். இதனை நாம் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையை கட்டி வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று எமக்கு வேண்டியது எமது பொது எதிரி யார் என்பதை இனங்கண்டு அதற்கு எதிராக செயற்பட வேண்டியதே ஆகும். இதனைவிடுத்து எமக்குள் வெட்டு, குத்துச் சண்டையில் ஈடுபடுவதால் எந்தவகையான பயனும் ஏற்படப்போவதில்லை. அதனால் சாதிக்கப்போவதும் இல்லை. மாறாக எமது எதிரியே பயனடைவான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம்களையும் நாம் கிழக்கில் வெல்ல வேண்டும். அவர்களை தனித்து விட்டுவிட்டு எதனையும் செய்ய முடியும், சாதிக்கலாம் என்று எண்ணக் கூடாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .