2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மக்களின் நம்பிக்கையை சிதறடிக்க விரும்பவில்லை: செல்வம் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

எமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை வெளியில் காட்டி எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதறடிக்க விரும்பவில்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

'தமிழரசுக் கட்சி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில் விரைவாக செயற்படாது விட்டால், தேர்தல் ஆணையாளர் கூறியது போல் அதுபற்றி பின்னர் யோசிப்பதில் பயனில்லை.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் ஒத்துக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பில் நாம் வலுவாக செயற்படவுள்ளோம். ஆகவே ஒற்றுமையாக இந்த பதிவை செய்து முடிப்போம்.

மக்களின் ஆணையானது நாம் ஒன்றுமையாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற செயற்பாட்டோடும் செயற்பட வேண்டும் என்பதேயாகும். அந்த ஆணையை தொடர்ச்சியாக எமது மக்கள் காட்டிவருகின்றார்கள். ஆகவே அந்த ஆணையையும் சிந்தனையையும் நாம் எந்தக் காலத்திலும் புறந்தள்ள முடியாது.

வருகின்ற தேர்தலிலும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் மக்கள் எம்மை புறந்தள்ளுவார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதேவேளை மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சின்னத்திற்காகவே வாக்களிக்கின்றார்கள் என்பதற்காக அந்த கட்சியும் அந்த சின்னமுமே பெரியது என நினைப்பது தவறானதாகும்.

இந்நிலையில் எமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை வெளியில் காட்டி எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதறடிக்க விரும்பவில்லை. ஆகவே மாவை சேனாதிராஜாவுடனும் பேசி நாம் சளைக்காமல் ஒற்றுமையாக வலுவான கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான செயற்பாட்டை விரைவாக முன்னெடுப்போம். அதனூடாக எமது மக்களின் இலச்சியத்தினையும் நிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகவுள்ளது.

அரசாங்கமும் ஜனாதிபதியும், தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் நாயை விடவும் மோசமாகவே கருதுவதாக தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதி மிக மோசமான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாகவே உள்ளது. இந் நிலையில் கூட்டமைப்பையோ தமிழ் மக்களையோ எடுப்பார் கைப்பிள்ளையாக ஜனாதிபதி எண்ணக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் நாம் அவரது உரையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, கடல் வளத்தில் நாம் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது, எமது மக்கள் அவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள நிலையில் எமது பூர்வீக நிலங்கள் பாதுகாப்பு வலயம் என தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு குவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு எமது மக்கள் இந்த தேசத்தில் நசுக்கப்படுகின்ற நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர் போகின்ற இடங்கள், அவர் செய்கின்ற வேலைகள், ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யும் முஸ்தீபுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்க வேண்டும் என நினைப்பதற்கு தமிழ் மக்களோ கூட்டமைப்போ எடுப்பார் கைப்பிள்ளை இல்லை.

சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் அவர் உரையாற்றியுள்ளார். அந்தவகையில் பார்க்கும் போது எமது பூர்வீகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு குறைந்து விடும் என்ற பயத்தினால் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் செயற்பாட்டில் ஜனாதிபதி இறங்கியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு இருபதனாயிரம் காணி துண்டுகளை வழங்குவது என்ற நிலை காணப்பட்டாலும் அதன் பின்னால் சிங்கள குடியேற்றங்கள் அமையப்போகின்றது என்ற ஐயப்பாடு எம்மிடம் இருந்தது.

அத்தடுன் எம்மையும் அழைத்து தனது செயற்பாட்டை நிறைவேற்றி எமது ஒத்துழைப்பும் கிடைத்தாக காட்ட அவர் எண்ணியுள்ளார் எனபதனை நாம் ஊகித்துக்கொண்டோம்.  இவ்வாறான நிலைகளை நாம் கருத்தில் கொண்டே அவரது வருகையில் நாம் கலந்து கொள்வதை புறக்கணித்திருந்தோம்.

இதேவேளை, தமிழ் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டது போன்று சிங்கள மக்களும் குடியேற்றம் செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையில் எமது மக்கள் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமது பூர்வீக் நிலங்களை பறிகொடுத்து வாழும் நிலையில் இவ்வாறான கருத்தை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான செயற்பாட்டை நாம் எதிர்ப்போம், அதற்கெதிராக போராடுவோம் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .