2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பிணையில் வந்தவர் மீண்டும் கைது

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

போலி புதையல் பண மோசடி வழக்கில் பிணையில் வெளியில் வந்த நபரை, திருட்டு குற்றச்சாட்டில் மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்த சம்பவம், வெள்ளிக்கிழமை(17) யாழ். நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

போலி தங்கப்புதையல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் வந்தார்.

இதன்போது, இவர் தான் எனது பணத்தையும் திருடிச்சென்றவர் என நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த ஒருவர் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, பிணையில் வெளியில் வந்த நபரை கைது செய்த பொலிஸார், கூச்சலிட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, கூச்சலிட்ட நபர், தான் ஒரு ஒப்பந்தக்காரர் எனவும், தனக்கு வாகனம் ஒன்றை வாங்கி தருவதாக கூறி மேற்படி நபர் தன்னுடன் நண்பன் ஆகியதாகவும் கூறினார்

யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் 4 இலட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு செல்கையில் தன்னுடன் மேற்படி நபர் வந்தததாகவும், இடையில் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டதால் அதனை தான் சரிபார்ப்பதற்காக இறங்கிய வேளையில் பின்னால் இருந்து தன்னுடைய பணத்தை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறினார்.

தற்போது நீதிமன்றத்திற்கு வேறு ஒரு அலுவல் காரணமாக வந்திருந்தவேளை இந்நபரை அடையாளங்கண்டு கொண்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து, பிணையில் வந்த நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நபர், தங்கப்புதையல் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .