2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீரால் பரவும் நோய்களில் யாழ். மாவட்டம் முதலிடம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

நீரால் பரவும் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் பிரதேசங்களில் யாழ். மாவட்டம் முதலிடம் வகிப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ்.வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பு வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

'நீரால் பரவும் நோய்களின் தாக்கத்தில் யாழ்.மாவட்டம் முதலிடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 272பேர் வயிற்றுளைவு நோயினாலும் 293பேர் நெருப்புக்காய்ச்சல் நோயாலும் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தின் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீரில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் குடிநீரை சுத்திகரித்து குடிக்க வேண்டும். யாழ்.மாவட்டத்தில் போத்தலில் அடைத்த குடிநீரை உற்பத்தி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்டதாகும். அதில் எவ்வித அரசியலும் இல்லை.

கொழும்பிலுள்ள உணவு பரிசோதனை நிறுவனம், யாழ்.மாவட்டத்திலுள்ள 20 ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகளை கோரியிருந்தனர். அதற்கு ஏற்ப நாங்கள் ஐஸ்கிறீம் மாதிரிகளை சேகரித்து உணவு பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பினோம்.

உணவு பரிசோதனை நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டு அனுப்பிய அறிக்கையில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிறீம்கள் மனித பாவனைக்கு உகந்ததல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு பின்னர் யாழ்.மாவட்டத்திலுள்ள 59 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களை சுகாதார சேவைகள் பணிமனையின் குழுவொன்று சென்று ஆராய்ந்தது.

பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியவர்களுக்கு அறிவுரைகள் கூறியதுடன், சில ஐஸ்கிறீம் கடைகளை மூடுவது சிறந்ததென்ற ஆலோசனைகளும், சிலவற்றிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுக்கு உடன் அனுமதி வழங்கப்படும். மேலும் ஐஸ்கிறீம் உற்பத்தியில் சிறு கைத்தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .