2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

யாழ்.மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார முறைகளுக்கு ஏற்ற விதத்தில் முறையாக எவ்வாறு ஐஸ்கிறீம் உற்பத்திகளை மேற்கொள்ளுதல் என்பது தொடர்பிலான பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பு, வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'பிழையான வழிநடத்தல்களால் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித பாவனைக்கு உகந்த ஐஸ்கிறீம் உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பில் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவர்களுக்கு மூன்று கட்டமாக தீர்வுகள் வழங்கப்படவுள்ளன. சிறு பிரச்சினைகள் காணப்படும் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

யாழ்.மாவட்டத்திலுள்ள நீரில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மலத்தொற்றுக்கு அப்பால் கிருமி தொற்றுக்கள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 3,800இற்கும் மேற்பட்டவர்கள் நீரால் பரவுகின்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளுக்கு சென்ற போது ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களுடன் சில பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடாவடித்தனம் செய்ததாக எமக்கு ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

அவ்வாறு அடாவடித்தனத்தில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .