George /
2014 நவம்பர் 04 , பி.ப. 02:30 - 0
- {{hitsCtrl.values.hits}}
மரங்களின் நிழலில் ஏதிலிகளாக பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருமே பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் மரங்களின் மீது வாழ்ந்தவர்கள்தான்.
மரங்கள்தான் மனிதனின் ஆதி வீடுகள். அந்தவகையில், நன்றி மறக்காதவர்களாக மரங்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய கட்டாயக் கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை கடைப்பிடிக்கும் விதமாக முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (03) மரம் நாட்டும் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னால் மரங்கள் தோன்றிவிட்டன. மரங்கள், மனிதர்கள் இல்லாமல் என்றும் நிலைத்திருக்கக்கூடியவை.
ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்களால் சில நாட்கள் கூட உயிர் வாழமுடியாது. மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல உலகில் வாழுகின்ற அத்தனை உயிர்களுக்குமே உயிர் ஆதாரம் மரங்கள்தான். ஆனால், நாம் மரங்களை கண்மூடித்தனமாக அழித்துவருகிறோம்.
மரங்களில்தான் எமது ஆதி மூதாதைகள் குடியேறியிருந்தார்கள். பரிணாமத்தில் மனிதர்களும் குரங்குகளும் ஒரு பொது மூதாதையில் இருந்தே தோன்றியுள்ளன.
இதற்கு சாட்சியாக இப்போதும் எமது முள்ளந்தண்டின் கடைசியில் வால் எலும்பு சிறிதாகக் காணப்படுகிறது.
இதைத்தான் குயிலலகு என்கிறார்கள். மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடுகின்றவர்கள் ஊஞ்சல் உயரே செல்லும் தருணங்களில் முள்ளந்தண்டின் கடைசியில் ஒருவித கூச்ச உணர்வை அல்லது துடிப்பை அனுபவரீதியாக உணர்ந்திருக்க முடியும்.
குரங்குகள் தவறி விழுந்துவிடாமல் இருப்பதற்காக வாலால் மரக்கிளைகளைப் பற்றிப்பிடிக்கின்றன. அதுபோன்றுதான் ஊஞ்சலில் உயரே செல்லும்போது, எங்கே தவறி விழுந்துவிடப்போகின்றோமோ என்ற பயத்தின் காரணமாக எமது வால் எலும்பு, தான் ஒரு வால் என்ற பழைய நினைப்பில் கிளைகளை எட்டிப்பிடிக்க எத்தனிக்கிறது.
இந்த எத்தனம்தான் முள்ளந்தண்டில் ஏற்படும் குறுகுறுப்புக்குக் காரணம். பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் நாம் மரத்தில்தான் வாழ்ந்தோம் என்பதை உருச்சிறுத்து தொழிலற்று போனதுக்கு பிறகும் வால் எலும்பு இன்றும் நினைவில் வைத்துக்கொண்டிருகிறது.
ஆனால், நாம்தான் நன்றி மறந்தவர்களாக எமது ஆதிவீடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் இந்த உண்மையைப புரிந்துகொண்டு ஆளுக்கொரு மரமாவது நட்டு வளர்க்கவேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 100 மாணவர்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.