2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் மூவரையும் திருப்பியனுப்ப ஏற்பாடு: எஸ்.டி.மூர்த்தி

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் வெள்ளிக்கிழமை (28) கரையொதுங்கிய மூன்று இந்திய மீனவர்களும் கடற்கொந்தளிப்பு தணிந்தவுடன் அவர்களின் சொந்தவூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என, யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பில் மூர்த்தி மேலும் கூறுகையில்,

இந்திய, தமிழகத்தின் வேதாரணியம் பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக, கடலுக்கு படகு ஒன்றில் புறப்பட்ட குட்டியப்பன் குமரன் (வயது 41), அரியகுட்டி காளியப்பன் (வயது 34), கண்ணன் காளிதாஸ் (வயது 40) ஆகிய மூன்று மீனவர்களும் கடற்கொந்தளிப்பால், கடல் அலைகளால் படகு தள்ளப்பட்டு, சுழிபுரம் கடற்கரையில் படகுடன் கரையொதுங்கினர்.

இவர்களை மீட்ட கடற்படையினர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (28) இரவு இந்திய துணைத்தூதரக அதிகாரிகளால் மேற்படி மூன்று மீனவர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து கையேற்கப்பட்டனர்.

இதன்போது, மூவரும் சுகயீனமடைந்திருந்ததையடுத்து, சங்கானை வைத்தியசாலையில் மீனவர்கள் மூவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த மீனவர்கள் கரையொதுங்கியமை தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்றதும், கடற்கொந்தளிப்பு நிலைமையை கருத்திற்கொண்டு மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஊடாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (30) அல்லது திங்கட்கிழமை (01) அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மூர்த்தி மேலும் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .