2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உவர்நீர்த் தடுப்பணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


காரைநகர், வேணன் உவர்நீர் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் செல்ல தொடங்கியுள்ளது.

இவ்விடயம் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்  பொன்னுத்துரை ஐங்கரநேசனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடைக்கப்பட்ட அணைப்பகுதியை தற்காலிகமாக புனரமைக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ந.சுதாகரன் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் க.கருணாநிதி ஆகியோருடன் அங்கு சென்றிருந்த அமைச்சர், மணல் மூட்டைகளை பயன்படுத்தி அணை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அணைக்கட்டை உடைத்த விசமிகளை கண்டறியக்கோரி நீர்ப்பாசன திணைக்களத்தால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடும் குடிநீர் பற்றாக்குறைவு  நிலவும் காரைநகரில் கடல்நீர் உள்ளே வராமல் தடுத்து, நிலத்தடிநீரை மேம்படுத்தும் நோக்கில் வேணான் உவர்நீர்த் தடுப்பணையை அமரர் ஆ.தியாகராஜா 70 களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.

இதனால் பல உவர்நீர் கிணறுகள் நன்னீராக மாறியுள்ளன. ஆனால், போர் காரணமாக பராமரிப்புப் பணிகள் இல்லாததால் அணை பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சர் கருத்துக்கூறுகையில்,

'கடந்த ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 23 மில்லியன் ரூபாய் நிதி உதவியோடு ஏறத்தாழ 5 கிலோ மீற்றர் நீளமான இந்த தடுப்பணை புனரமைக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக பெய்த பெருமழையால் இந்த அணைக்கட்டில் பாரிய நீர்த்தேக்கம் போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் காரைநகர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமது நன்னீர்வளம் மேம்படும் என்று நம்பியிருந்த நிலையிலேயே சில விசமிகளால் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒன்றரை அடி அகலத்தில் உடைக்கப்பட்டிருந்த பகுதி, மழைநீர் பேராறு போல கடலை நோக்கி பாய தொடங்கியதால் அரிக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே 100 அடி அகலத்துக்கு உடைப்பெடுத்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்கொண்டிருக்கும் குடிநீர் பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அத்துடன் காரைநகர் அபிவிருத்தி சபையினதும், பிரதேச சபையினதும் தண்ணீர் தாங்கி வாகனங்களை தினமும் எதிர்பார்த்து நிற்கும் காரைநகர் மக்களுக்கு இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகவே புரியும்.

எமது அமைச்சும் காரைநகர் ஊரி பகுதிக்கு தினமும் இரண்டு வேளை குடிதண்ணீரை வழங்கி வந்துள்ளது. இந்தநிலையிலேயே, சில விசமிகள் அணைக்கட்டை உடைக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடும் வரட்சிக்கு பின்னர் மழை இப்போதுதான் பெய்ய ஆரம்பித்துள்ளது. சொட்டு மழைநீரையும் வீணாக கடலுக்குள் செல்வதற்கு அனுமதிக்க முடியாத சூழ்நிலையே வடக்கில் நிலவுகிறது.

இதை புரிந்துகொண்டு, மழைநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை பொதுமக்கள் ஒரு சில நாட்களுக்கு பொறுத்து கொள்ளவேண்டும். இல்லாவிடில், குடிநீருக்கு இப்போது அலைவதைவிட வருங்காலங்களில் அதிகமாகவே அலையவேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .