2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்காமை தவறு: சி.வி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 11 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்ட போதும், அதே சம்பவத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படாமை தவறாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோரும் பிரேரணை, ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்டினால் கொண்டுவரப்பட்டது. இருப்பினும்,  அவர் நேற்று அமர்வில் கலந்து கொள்ளாததால் அந்த பிரேரணையை ஆளுங்கட்சி உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி சபையில் முன்வைத்தார்.

பிரேரணையை வழிமொழிந்த ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், இந்திய மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி, இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்காமை பற்றி நீதியரசர் என்ற முறையில் முதலமைச்சர் கருத்துக்கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க கருத்து கூறிய முதலமைச்சர், 'இந்திய மீனவர்கள் ஐவரை விடுதலை செய்தது போல இலங்கை மீனவர்கள் மூவரையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்திருக்க வேண்டும். மீனவர்களின் விடுதலை தொடர்பில் இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

ஒன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பது. மற்றையது மேன்முறையீடு செய்வது. மீனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டோம்' என்றார்.

இது விடயமாக, யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரலுடனும் கலந்துரையாடினேன். மீனவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தற்போது நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றுள்ளதாக கூறப்பட்டு, அதன்மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்' என முதலமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, 'இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .