2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மேலதிக அமைச்சுக்கள் வழங்கியமைக்கு விளக்கம் தேவை; வடமாகாண சபையில் கோரிக்கை

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா

முதலமைச்சருக்கு கீழிருந்த அமைச்சு பொறுப்புக்கள் சிலவற்றை வடமாகாண அமைச்சர்கள் மூவருக்கு கீழ் கொண்டு வந்தமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் தரவேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, தனது அமைச்சுப்பொறுப்புக்கள் சிலவற்றை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஊடாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வழங்கியமை தொடர்பிலான விவாதம் சபையில் இடம்பெற்றது.

வடமாகாண அமைச்சர்களுக்கு எந்ததெந்த அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் தங்களுக்கு அறியத்தரவில்லையென எதிர்கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் கோரிக்கை முன்வைத்தார்.

இந்த கோரிக்கையை ஆமோதித்த வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனக்கு இது தொடர்பில் எவ்வித விடயங்களும் தெரியாது எனவும், இது பற்றி முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சுக்கள் மாற்றப்பட்டமை பற்றிய அறிக்கையில் சில விடயங்களில் தவறுகள் இருப்பதாகவும் அவற்றை சரி செய்த பின்னர் சரியானதும் முழுமையானதுமான அறிக்கை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்குவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக இருக்கும் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு மேலதிகமாக, கூட்டுறவு, நீர்வழங்கல், மற்றும் உணவு வழங்கல் உணவு விநியோகம் ஆகிய மூன்று அமைச்சு பொறுப்புக்களும், வடமாகாண சுகாதார அமைச்சராக இருக்கும் பத்மநாதன் சத்தியலிங்கத்துக்கு மேலதிகமாக சமூக சேவைகள் புனர்வாழ்வு, பெண்கள் விவகாரம் ஆகிய இரண்டு அமைச்சு பொறுப்புக்களும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வியாபார மற்றும் கிராமிய அமைச்சராக இருக்கும் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரனுக்கு மேலதிகமாக, வீதி அபிவிருத்தி, மோட்டார் திணைக்களம் ஆகிய இரண்டு அமைச்சு பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .