2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திருப்பழனியிலுள்ள இயற்கை கற்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

வவுனியா, சிதம்பரபுரம், திருப்பழனி முருகன் ஆலயம் அமைந்துள்ள இடத்திலுள்ள இயற்கை கற்கள் அரிந்து எடுக்கப்பட்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வவுனியா, சிதம்பரபுரம், திருப்பழனி முருகன் ஆலயம் சிறந்த யாத்திரிகர் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதனால், பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த பிரேரணையை வழிமொழிந்து சுகாதார அமைச்சர் கருத்துக் கூறுகையில், 'இந்த பிரேரணையில் சுற்றுலாத்துறை என்ற சொல்லுக்கு பதிலாக புனித பிரதேசமாக மாற்றுவது சிறப்பாக அமையும். இந்த மலைகளை உடைப்பதற்காக சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கேட்டு அனுமதி மறுத்த நிலையில், வேறு செல்வாக்குகள் மூலம் இந்த மலைகள் டைனமேற் வெடிகள் மூலம் உடைக்கப்பட்டு கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த சூழலில் 600 குடும்பங்கள் மீளக்குடியேறி வசித்து வருகின்;றனர். டைனமற் வெடிகளால் அவர்களின் வீட்டு சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன், அப்பகுதியிலுள்ள மூலிகைகளை பாதுகாக்கும் பொறுப்பை சுதேச வைத்திய நிறுவனம் தற்போது ஏற்றுள்ளது. இந்த பகுதியை பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டிய சூழலில் வடமாகாண சபையினராகிய நாம் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

புனித பிரதேசம் ஆக்க வேண்டும் என குறிப்பிட்டால் அது மத்திய அரசின் கீழ் வரும். எனவே யாத்திரிகர் தலம் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்துவோம் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டதை தொடர்ந்து இந்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வட மாகாணத்திலுள்ள உயரமான மலையாக இந்த கல் மலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .