2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பணப்பரிமாற்றல் மோசடியில் இருவர் கைது

Gavitha   / 2015 மே 17 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஈசி கேஷ் பணப்பரிமாற்றம் மூலம் பலரையும் ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்த இருவரை வெள்ளிக்கிழமை (15) கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.மஞ்சுல.டி.சில்வா சனிக்கிழமை (16) தெரிவித்தார்.

கைதான இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்று  பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பண்டத்தரிப்பு பகுதியினைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் அழைப்பினை ஏற்படுத்திய நபர், உங்கள் அலைபேசி இலக்கத்துக்கு ஈசி கேஷ் மூலம் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அப்பணத்தினை பெறுவதாயின் 67 ஆயிரம் ரூபாயை தனது இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, வங்கி கணக்கு இலக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.

இதனை நம்பிய பெண் 67 ஆயிரம் ரூபாயை கொடுக்கப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பு செய்துவிட்டு தனது அலைபேசிக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்துள்ளார்.

அழைப்பு எதுவும் வராத நிலையில் அழைப்பு வந்த இலக்கத்துக்கு  தொடர்பினை ஏற்படுத்திய போது அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்த பெண், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்ததுடன், குறித்த நபரின் அலைபேசி இலக்கம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெற்றிருந்தனர்.

குறித்த அலைபேசி இலக்கத்தினை, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் விசாரணை மேற்கொண்ட போது, மேற்படி அலைபேசி இலக்கம் மட்டக்களப்பு கல்முனை பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (15) இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு  வரவழைக்கப்பட்ட நபர், கைது செய்யப்பட்டிருந்ததுடன் மேற்படி சந்தேகநபருக்கு உதவி செய்த இரண்டாம் சந்தேகநபரும் சனிக்கிழமை (16) வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தன்னை ஒருவர் ஏமாற்றியதால், மனதளவில் பாதிப்படைந்த நான் மற்றவர்களை ஏமாற்றி வருவதை பழக்கப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சனிக்கிழமை (16) கைது செய்யப்பட்டோரை மல்லாகம் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 20ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஈசி கேஷ் பணப்பரிமாற்றம் மூலம் இவ்வாறான மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் இவ்வாறான ஏமாற்று சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் இளவாலை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .