Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 18 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமைப் போரில் நாம் வீழ்ந்து விட்டோம். ஆனாலும் பாரதினில் மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்போம். உயிரிழந்த உறவுகளின் உறக்கத்துக்காய் பிரார்த்திப்போம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் திங்கட்கிழமை (18) அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அழிவுகள் எமது இனத்தை தொட்டுச்சென்ற காலங்களில் தமிழ் மக்கள் துவண்டு போனதாக வரலாற்றில் பதிவுகள் கிடையாது. கடந்து சென்ற கறைபடிந்த வரலாற்றில் தமிழ் மக்கள் பல புதிய பாடங்களை கற்று தெளிந்துள்ளனர். இந்த பாடங்கள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்படும் தமிழர் உரிமை விடியலுக்கான பாதையின் உயிர்மையாக அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு இந்த நினைவேந்தல் வேண்டும்.
நீண்ட விடுதலை போரட்டத்தின் பயணத்தில் பல சாதனைகளையும் நம்ப முடியாத வெற்றிகளையும் கண்டுகொண்ட தமிழினம், அரசியற் பயணத்தின் நகர்வுகளில் கண்ட தவறுகள் காரணமாக நம்பமுடியாத அழிவுகளுடன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு கூட அவகாசமில்லாது மௌனிக்க செய்யப்பட்டுள்ளது என்றும் குகனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
செழுமையாய் வாழ்ந்த தமிழினம் குந்தியிருந்த நிலம் தொட்டு குடிப்பதற்கு கஞ்சி கிடையாத இனமாகி மற்றவர்களை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் கண்ட அழிவுகள் தமிழன் கண்ட கனவுகளை எல்லாம் கனவுகளாக்கி விட்டு சென்றுவிட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தேசமதில் உரிமையற்றவனாக காணப்படும் தமிழன் ஒன்றுபட்டு சமகால அரசியல் நகர்வுகளுக்கேற்ப எமது அரசியற் பாதையையும் நகர்த்தி சென்று இழந்தபோன உரிமைகளை பெற்றுக்கொண்டு தமிழர் தேசமெங்கும் உறைந்திருக்கும் எமது இனத்தின் ஆத்மாக்களுக்கு ஆத்ம சாந்தியை பெற்றுக்கொடுக்க ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறை தவறிச்சென்ற பாதைகள் உரிய இடத்தை சென்றதில்லை. கடந்தகால வரலாற்றில் துரோகங்கள், ஒற்றுமையின்மை, நீண்ட தூரநோக்கமின்மையால் நாம் பெருந்துயரங்களை கடக்கவேண்டியிருந்தது. அதனால் மதிக்க முடியாத விலைகளையும் காணிக்கையாக செலுத்தவேண்டியிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
வரலாறு தந்த பாடத்தையாவது தமிழினம் கற்றுக்கொண்டு புதிய உத்வேகத்துடன் உரிமைப்பயணத்தை தொடரவேண்டும். அதற்கான உரிமைப்போரில் உயிரிழந்து உறங்குகின்ற எமது உறவுகளுக்கு உரிமையுடன் நினைவேந்தலை செய்யவேண்டும் என்றும் அமைப்பாளர் கூறியுள்ளார்.
உறக்கமின்ற உரிமைப் போருக்காய் உயிர் கொடுத்த நம் தேச உறவுகளுக்கு உணர்வுடன் அஞ்சலி செலுத்தி தேசமெங்கும் அமைதியின்றி திரியும் ஆத்மாக்களை அமைதிகொள்ள வைப்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago