2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இளைஞர்களின் கையில் சமூகத்தின் எதிர்காலம் உள்ளது: முருகேசு

Gavitha   / 2015 மே 18 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

சமூகத்தில் இளைஞர்களே உயிர்நாடி. இளைஞர்களின் கைகளில்தான் சமூகத்தின் எதிர்காலம் முன்னேற்றம் உள்ளது.

விளையாட்டில் மட்டும் இளைஞர்கள் அக்கறை காட்டாது, சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் உழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

பூநகரி தெற்கு ஜெயபுரம் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் விசேட நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தை விளையாட்டுக்கழகத்திடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெயபுரத்தில் ஏராளமான இளைஞர்கள் தம்மை விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடுத்தியதை அவதானிக்கின்றோம். வேறு பிரதேசங்களில் இவ்வாறான அதிக ஆர்வம் இல்லை. குறிப்பாக, பூநகரி தெற்கு பிரதேசத்தில் கால்பந்தாட்டம், கிரிக்கெட் உட்பட பல்வேறு துறைசார்ந்த விளையாட்டுகளில் இளைஞர்கள் பங்களிப்பு ஆர்வம் என்பன அதிகமாகவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கால்பந்தாட்டத்தில் சிறந்த பெறுபேறுகளையும் முதன்மை நிலைகளையும் பெறுவது பூநகரி தெற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகங்கள் ஆகும் என்று இதன்போது அவர் தெரிவித்திருந்தார்.

ஜெயபுரம் பிரதேசத்தில் 1,000 ஏக்கர் நிலப்பகுதியில் முந்திரிகைத் தோட்டம் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக அந்த முந்திரிகைத் தோட்டத்தை இந்த பிரதேச மக்களுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்றோம்.

துரதிஸ்டவசமாக சில இராணுவத் தலையீடுகள் அதற்கு தடையாக இருந்திருக்கின்றன. தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. முந்திரிகைத் தோட்டத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் பெற்றுத்தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பல்லின மக்கள் வாழும் இலங்கையில், எங்களது பிரதேசத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது அரசியல் ரீதியாக எமக்கு தரப்பட்ட உரிமை. அதனை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. தேசிய கீதம் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே பாட வேண்டும் என்பது அரசியலமைப்பில் எமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. இதை யாரும் தட்டிப்பறிப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .