2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'புங்குடுதீவு விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம்; தமிழர்களுக்கு பாதிப்பு'

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி மீதான கூட்டு வன்புணர்வு விவகாரத்தில் சந்தேகநபர்களுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுத்திருப்பதானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எதிரான பல தவறான விடயங்களுக்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரம், நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், அவ்வழக்கு தொடர்பான சட்டப் போக்குகள் அந்த சட்டப் போக்குகளின் அரசியல் பரிமாணங்கள் ஆகியன குறித்து தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய்ந்து சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.

புங்குடுதீவு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யபட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும். அதேசமயம் அவ்விடயத்தில் சட்டத்தின் முன்மாதிரி சரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு விரைந்து அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், அவர்கள் தப்பிக்கவே இடமளிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கில், எமது தமிழ் பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட, தமிழர்கள் மீது 37 ஆண்டுகளுக்கு மேலாக ஏவிவிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுப்பதைப் பார்த்திருப்பதா? என்ற கேள்வி நம் மத்தியில் எழுந்திருக்கின்றது.

இந்தச் சட்டத்தை இந்த விடயத்தில் அரசு கையில் எடுப்பதை கவனிக்காமல் இருப்பது எதிர்காலத்தில் பல தவறான விடயங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரியாக இது மாறிவிடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

புலன்விசாரணைகள் பூர்த்தியாகாத விடயத்தில் விசேட ஏற்பாடுகளின் கீழ் சந்தேகநபர்களை பொலிஸார் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கும் விசேட உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்க முடியும். அதற்கு சாதாரண சட்டத்தில் இடமுண்டு. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம்தான் அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதல்ல.

காமுகத்துக்காக செய்யப்பட்ட படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று அர்த்தப்படுத்தி நீதிமுறையற்ற சட்டங்களை ஏவுவதற்கு அனுமதிப்பது சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்கிவிடும். பிற்காலத்தில் பிழையான நடைமுறைகளுக்கு அது வழிகாட்டிவிடலாம்.

புங்குடுதீவு விடயத்தில் அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கையில் எடுத்திருப்பதால் அதன் கீழேயே வழக்கு விசாரிக்கப்படும் சூழலும், அதனால் ஆகக்கூடிய தண்டனையான மரணதண்டனையிலிருந்து இக்கொடூரத்தைப் புரிந்தவர்கள் தப்பவும் கூட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் கடந்த தவணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை. இந்த விடயத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்வதை சட்டரீதியாக ஆட்சேபிக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என சந்தேகநபர்களினால் பின்னாளில் சட்டவாதம் முன்வைக்கப்படலாம்.

இந்த வாதத்தோடு, பயங்கரவாதம் என அர்த்தப்படுத்த முடியாத விடயத்துக்கு அந்தச் சட்டத்தைப் பிரயோகித்தமை நீதி தொடர்பான முழுத்தவறு என்று சந்தேகநபர்களினால் பின்னாளில் சட்டவாதம் முன்வைக்கப்படுமானால் முழு வழக்கு விசாரணையே பின்னடைவைச் சந்தித்து, குற்றமிழைத்தவர்கள் தப்பவும் வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்.

சட்ட முரணான, சமூகப் பிறழ்வான, அநீதி மற்றும் அநாகரிகச் செயலாக மட்டும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை மற்றும் வழக்கு விசாரணையும் நோக்குவதுடன் நாம் நின்றுவிட முடியாது. அதற்கு அப்பாலும் இவ்வழக்கின் விசாரணை போக்கில் தொடர்புபட்டுள்ள நீதி, நியாயம், சமூகப்பார்வை, அரசியல் பரிமாணம் ஆகியவற்றையும் நாம் நோக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .