Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அனந்தி சசிதரனால் இன்று செவ்வாய்க்கிழமை (04) அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை, வடமாகாண சபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
போரில் என்னை போல இழப்புகளுக்கு முகங்கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்தி குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அதுமட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.
மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும், இறுதிக்கணம் வரை சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக கண்காணிப்புக்குழுவின் தலைவராக, இறுதியாக இருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்(க)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.
போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக்கணங்களில்கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக்கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார், அவருக்கு நடந்தது என்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு, இனஅழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச்சபையில் முன்வைத்தேன்.
உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாண சபை சார்பாகவும் முதன்முதலில் ஐ.நா.மனித உரிமை சபையில் நேரடியாக, இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான் கோரும் வரை வேறு எந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோ அங்கு கலந்துகொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.
என்னைக்கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக்கோரக்கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன். இனஅழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம்திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.
ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது என்னிடம் ஒருநாட்டின் பிரதிநிதி சுமந்திரன் இனஅழி;ப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.
உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்துகொண்டு, இனஅழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஜெனிவாவில், தேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன்வைத்தார்.
எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமான நிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பாங்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சிலசக்திகள் இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளக விசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம்தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது. அதேபோல எமக்குள், இருந்து எந்தக்குரல், எந்தக்கோரிக்கை ஒலிக்கக்கூடாது என்பதும் முக்கியமாகிறது.
இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது தவிர்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்க யாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்புவாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.
வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இந்தக் கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவுசெய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே. பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து, இனஅழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான, நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்று;க்கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.
நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக, இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றுநான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
நான் எனது கட்சியை விட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒருதுளியும் திட்டமிட்டு இருக்கவில்லை. சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை.
தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக் கட்டமைப்புக்குள், இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
41 minute ago
54 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago
55 minute ago