Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 ஜனவரி 18 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பட்டிவெலானவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (18) உத்தரவிட்டார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களில் 12 பேர் சார்பில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களால் குறித்த ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி மனுத்தாக்கல் செய்த 12 பேரில், 9 பேர் கடந்த 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி மனுத்தாக்கல் செய்த 12 பேரில் அவ் 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் புதிதாக தாக்கல் செய்த மூவரின் மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு இன்று (18) வியாழக்கிழமை திகதியிடப்பட்டது.
இந்த வழக்கில் 1ஆவது எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ஆவது எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆவது எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த் மற்றும் எஸ்.பிரிந்தா ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.
வழக்குத்தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி முகாமுக்கு பொறுப்பாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்.
“முதலாம் எதிர் மனுதாரரான இராணுவக் கட்டளை அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலானவை வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும்” என உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், மனுக்கள் மீதான விசாரணையை அன்றுவரை ஒத்திவைத்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago