2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

38 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் தடுத்து வைத்திருக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டார்.

செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும், ஒக்டோபர் 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் காற்றால் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும், நவம்பர் 23ஆம் திகதி நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த புதன்கிழமை (03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை சந்தித்த யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்கள்.

எனினும், தாங்கள் விடுதலை செய்யும் திகதி அறியும் வரையில் தங்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து, மீனவர்களில் போராட்டம் மற்றும் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கும்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும், டில்லி வெளிவிவகார அமைச்சுக்கும் யாழ்.இந்திய துணைத்தூதரக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் வியாழக்கிழமை (04) மாலை சிறைச்சாலைக்கு சென்ற இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், விடுதலைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதியளித்துள்ளதாக கூறியதையடுத்து, இந்திய மீனவர்கள் தங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், 38 மீனவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .