2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

80 இலட்சம் மோசடி : பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பிணை

எம். றொசாந்த்   / 2018 மே 02 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கிகளின் ஏ.ரி.எம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபாயை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (01) உத்தரவிட்டது.

அனுராதபுரம் பகுதியில் இயங்குகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வங்கிகளின்  ஏ.ரி.எம் நிலையங்களுக்கு பணத்தை விநியோகம் செய்யும் பணியை முன்னெடுத்து  வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அனுராதபுரத்திலிருந்து 11 கோடியே 74 இலட்சம் ரூபாய் பணத்தை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அந்த நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது.

யாழ்ப்பாணம் வந்து பணத்தை சரி பார்த்தபோது, அதில் 80 இலட்சம் ரூபாய் பணம் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

அவர்கள் நேற்று (01) செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்.

“இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எவரும் இரண்டு தவணைகளாக மன்றில் தோன்றவில்லை. எனவே இந்த வழக்கில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. அதனால் சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும்” என சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. பல தடவைகள் நினைவூட்டப்பட்டது" என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

“பொதுச் சொத்துக்கள் மோசடிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் பிணையில் சென்றால் பாதிப்பு ஏற்படும்" என்று பாதுகாப்பு சேவை நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எவரும் கடந்த 2 தவணைகளாக மன்றில் முன்னிலையாகி விசாரணை தொடர்பான அறிவிப்பை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் அசமந்த செயற்பாட்டை கண்டித்த நீதிவான் எஸ்.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

சந்தேகநபர்கள் 5 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 ஆட பிணையை மன்றில் முற்படுத்தவேண்டும். அவர்களின் வதிவிட முகவரியை கிராம அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும்" என்ற நிபந்தனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .