2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அச்சுவேலி சம்பவம்: 14 இராணுவத்தினரின் மறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

1998ஆம் அச்சுவேலி சிறுப்பிட்டிப் பகுதியில் இரண்டு சிவிலியன்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை இதுவரை கிடைக்க பெறாத காரணத்தினால் 14 இராணுவத்தினரையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

தொடர்ந்து நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மீது இதுவரை போதிய விசாரணை இன்றி தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் நீதவான் தனது அதிருப்தியினை வெளியிட்டதுடன், உரிய சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசணை வழங்கினார்.

திங்கட்கிழமை (30)  மேலதிக அறிக்கையுடன் இணைந்திருந்த பொலிஸார் தொடர்ந்து குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்குரிய ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போனார்கள்.

மட்டுவில் வடக்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தராஜன் ஆகிய இளைஞர்கள் இவ்வாறு காணாமற்போனார்கள். இவர்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிணையில் விடுவிக்கப்பட்ட 16 இராணுவத்தினர் தொடர்பான கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அது இதுவரை காலமும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

18 வருடங்களின் பின்னர் இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலனைக்கு எடுத்தது. திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 16 இராணுவத்தினரில் 2 இராணுவத்தினர் யுத்தத்தில் உயிரிழந்தமையால், மிகுதி 14 இராணுவத்தினரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X