2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அண்ணாமலையிடம் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையினை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

தமிழக அரசினால் தரப்படும் அத்தியாவசிய பொருட்களை வடக்கு மாகாணம்,  கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கை என நான்கு பாகங்களாக பிரித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அதனை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கடிதம் எழுதியமைக்கான காரணத்தை அவருக்கு தெளிவுபடுத்தினேன். பணம் இருந்தால் கூட பொருட்களை வாங்க முடியாது என்கிற தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளேன். 

இதற்கு, பொருளாதார ரீதியாக நன்மைகளை இந்தியா பெற்றுக்கொடுக்கும் என அவர்  தெரிவித்திருந்தார்.

மேலும் அவரிடம் கூறாத ஒரு விடயத்தை ஊடகங்கள் ஊடாக பொதுமக்களிடம் அவரிடமும் கூறவுள்ளேன். வடமாகாண முதலமைச்சராக நான் இருந்த போது வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரை ஒரு கரையோர பெரும் வீதியை அமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.

அது சம்பந்தமாக அப்போது இருந்த இந்திய உயர்ஸ்தானிகர் என்னிடமிருந்து முழுமையான விபரங்களை அறிந்து இருந்ததுடன், அந்த நேரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமென கணித்து சகல விவரங்களையும் அவருக்கு வழங்கியிருந்தோம். 

அதைப்பற்றி இந்திய அரசாங்கத்துடன் பேசி ஒரு நடவடிக்கை எடுக்கலாம் என இந்திய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். இந்த சந்திப்பில் அதனை கூற எனக்கு மறந்து விட்டது. இதனை ஊடகங்கள் வாயிலாக அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார்.

பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X