2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘அதிகாரம் மத்திக்குப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை’

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மாகாண அதிகாரம் மத்திக்குப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு மத்திக்கு கொடுக்கவும் கூடாதென்பதே என்னுடைய நிலைப்பாடு என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இதில் தெளிவாகச் சொல்ல விரும்புவது என்னவெனில் 13 ஆவது திருத்தத்தில் முழுமையான நம்பிக்கையை நான் வைத்திருக்கின்றேன். அதாவது அதிகாரப் பரவலில் எங்களிடம் என்னென்ன அதிகாரங்கள் கிடைத்ததோ அதில் ஒன்றைக் கூட அல்லது ஒரு துளியைக் கூட நாங்கள் திரும்பவும் மத்திக்கு கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் எங்களுக்கு வேண்டாம்.

கல்வி என்பதில் உயர் கல்வி அல்லாமல் இரண்டாம் தர மற்றும் கீழ் மட்டக் கல்வி என்பன மாகாணத்திற்குள்ளான பார்வையில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்களிடம் இருந்து சில பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்கலாமென்ற கோரிக்கை எனக்கு வந்தது. ஆனால் இது என்னுடைய விருப்பம் அல்ல. இங்குள்ள பாடசாலைகளின் பிரதான ஆசிரியர்களும், பெற்றோரும் மத்திய அரசின் அமைச்சராக இருக்கின்ற விஐயகலா மகேஸ்வரனும் ஏனைய சிலரும் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகள் தான் இது.

மத்திய அரசாங்கம் பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு தொகை பணத்தை வைத்திருக்கின்றது. அது தேசிய பாடசாலைகளுக்குத் தான் கொடுக்கப்படும். தேசிய பாடசாலைகள் இல்லாவிட்டால் அது கொடுக்க முடியாது. ஆகவே அந்தக் கொடுப்பனவு கிடைத்தால் சில வளங்களை உருவாக்கலாம். உதாரணமாக நீச்சல் தடாகம், கிரிக்கட் பயிற்சி நிலையம் என்பவற்றை உருவாக்குவதற்கு வளங்கள் தேவை. அந்த வளங்களை மத்திய அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக இருக்கின்ற பாடசாலைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

கல்வி எங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் கல்வித் துறையில் வீழ்ந்திருக்கின்றோம். இதற்கு போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதே காரணமாகும். ஆகையினால் தேசிய பாடசாலைகளுக்கு அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கின்ற அபிவிருத்தி வளங்களை தேசிய பாடசாலைகள் எங்களிடம் இல்லாத படியினால் எங்களால் அதனை எடுக்க முடியாமல் இருக்கின்றது.

நான் ஒரு நிர்வாகி என்ற அடிப்படையில் ஆகையினால் மக்கள் விருப்பம் என்ன அதற்கு என்ன என்ன செய்யலாம் என்று தான் எப்பவும் நாங்கள் யோசிக்க வேண்டும். நாட்டிலுள்ள ஏனைய 8 மாகாணங்களை பார்க்கும் போது சராசரியாக 3.5 சதவீதங்களுக்கு தேசிய பாடசாலைகளாக இருக்கின்றது. அப்படிப் பார்க்கின்ற போது வடக்கு மாகணத்தில் 2 சதவீதம் தான் தேசிய பாடசாலையாக இருக்கின்றது. ஆகையினால் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு ஒப்பிட்ட வகையில் 3.5 வீததத்திற்குப் போக வேண்டுமென்றால் இன்னும் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற வேண்டும். அப்போது தான் மற்றைய மாகாணங்களுக்கு சராசரியாக வரும்.

ஆனாலும் நான் அவ்வாறு மாற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. எங்களிடம் 5 மாவட்டங்கள் உள்ளது. அந்த 5 மாவட்டத்திலும் 22 தேசிய பாடசாலைகள் இருக்கின்றன. அதில் யாழில் மட்டும் 14 பாடசாலைகள் இருக்கின்றன. ஆகையினால் இன்னும் 14 பாடசாலைகள் என்ன என்ன பாடசாலைகள் என்று நீங்கள் தான் சிபார்சு செய்ய வெண்டுமென்று கூறி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனாலும் அந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றேன். அது தவறு தான்.

அவர்கள் யாரும் விருப்பமில்லை என்றால் எனக்கும் பிரச்சனையில்லை. ஏனெனில் எனக்கும் அவ்வாறு செய்வது விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .