Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 22 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
"துப்பாக்கியை, துப்பாக்கிதாரி கையாண்ட விதம், அனுபவம் உள்ள ஒரு நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தைப் பார்த்தபோது, அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கி சூட்டாளர் போன்றே தோன்றியது.
மேலும், மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகமானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்" என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ். நல்லூர் தெற்கு வீதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் இருவர் மீது இன்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தை நீதிபதி விபரிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"5.10 மணிக்கு நான் நல்லூர் பின் வீதிக்கு வரும்போது, போக்குவரத்துக்காக எனது கார் நிறுத்தப்பட்டது. அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த என்னுடைய மெய்ப்பாதுகாவலர், வாகனங்களை நிறுத்தி என்னுடைய வாகனத்தை செல்ல ஒழுங்கு செய்யும்போது எனது வாகனம் நல்லூர் வாசல் நோக்கி திரும்பியது. அப்போது வாகனங்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை சிவில் நபர் ஒருவர் எடுப்பதை நான் கண்டேன். அப்போது குறித்த துப்பாக்கியை மெய்ப்பாதுகாவலர் பறிக்க முற்பட்டார். இருவரும் இழுபட்டு கொண்டிருந்த போது ‘துப்பாக்கியை விடுடா’ என கத்திக்கொண்டு நான் அவர்களை நோக்கி ஓடினேன்.
அப்போது, எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பி துப்பாக்கிதாரி சுட முயன்ற போது என்னுடைய மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஓடி வந்து என்னை காரினுள் தள்ளி ஏற்றினார்.
என்னை காரினுள் ஏற்றி விட்டு அவர் துப்பாக்கிதாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், தோட்டாக்கள் ஆலயபின் பகுதியில் இருந்த வேலித் தகரங்களை துளைத்துச் சென்றன.
துப்பாக்கிதாரி, மீண்டும் என்னை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அப்போது பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தோட்பட்டையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது.
எனது பாதுகாப்பு உத்தியோகத்தர், துப்பாக்கிதாரி மீது மூன்று நான்கு சூட்டினை நடாத்தி இருந்தார். அதில் துப்பாக்கிதாரிக்கு காயம் ஏற்பட்டதா என்பதனை அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் நொண்டி நொண்டி ஓடினதை அவதானித்தேன்.
அதனைத் தொடர்ந்து காயத்துக்கு உள்ளான, எனது இரு மெய்பாதுகாவலர்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றேன்.
இது தொடர்பில், பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவித்து குறித்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை பரிசோதித்து துப்பாக்கிதாரியை கைதுசெய்யும் நடவடிக்கையை துரிதகதியில் முன்னெடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளேன்.
நான் வழமையாக கோவில் வீதியால் தான் சென்று வருவேன். அதனை அவதானித்து, என்னை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதா எனும் சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. அண்மைக் காலமாக, யாழ். மேல் நீதிமன்றில் நடைபெறும் பாரதூரமான வழக்குகளை கையாளும் நபராக இருப்பதனால், இந்தத் துப்பாக்கிச் சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில், அந்தத் துப்பாக்கியை அவர் கையாண்ட விதம், ஒரு அனுபவம் உள்ள நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை பார்த்தபோதும் அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கிச் சூட்டாளர் போன்றே தோன்றியது.
வீதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் எனது மெய் பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆனது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்.
ஏனெனில், அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான். அத்துடன் எனது மெய்ப்பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது.
ஆகவே, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்" எனத் தெரிவித்தார்.
8 minute ago
14 minute ago
28 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
28 minute ago
45 minute ago