2025 ஜூலை 26, சனிக்கிழமை

’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியிலுள்ள அனைத்துத் தர மக்களிடமும் கடன் தொல்லை காணப்படுவதாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், நிதி நிறுவனங்கள் மீதும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

 

நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழா இன்று (30) காலை நடைபெற்றது. இதன்போ​தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம், இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஓர் இனமாக, நாங்கள்  மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.

“கட்டுப்பாடுகள் மிகுந்த காலத்திலும், அடிப்படை வசதிகள், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் அற்ற நிலையிலும், வட பகுதியானது கல்வியில் மிகவும் சிறந்த நிலையில் நின்று முதலாவது இடத்தைப் பெற்றிருந்தமை, இச்சந்தரப்பத்தில் நினைவுகூரப்பட வேண்டும்.

“வடமாகாணத்துக்கு வெளியே உள்ள ஏனைய மாகாணங்களுடன் வர்த்தகத் தொடர்புகள் அற்ற நிலையிலும், எமது மக்களிடம் பணப்புழக்கம் அந்தக் காலகட்டத்தில் சீராக இருந்தது.

“இன்று, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தகம், கொடி கட்டிப் பறக்கின்றது. தொடர் மின்சாரம் கிடைக்கின்றது. போக்குவரத்து ஒழுங்குகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளங்கை வரை வந்துவிட்டன. மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், நிறுத்தி வைக்கக்கூட போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அனைத்துத்தர மக்களிடமும், இன்று கடன் தொல்லை நிறைந்து காணப்படுகின்றது. பட்டி தொட்டி எங்கும் முளைத்துள்ள நிதி நிறுவனங்கள், எமது வர்த்தகர்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் ஆசை வார்த்தை காட்டி, உதவுவது போல் நடித்து, எமது வடபகுதியை விட்டு, அவர்களின் பணத்தை வெளியே எடுத்துச் செல்கின்றார்கள். நுகர்ச்சிப் பொருட்களில் எமது நாட்டங்கள் பதிந்துவிட்டதால், பணவிரயத்துக்கு முகம் கொடுத்து வருகின்றோம். 

“வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களைக் கண்டுபிடித்தனர். எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள் இந்தச் சாதனங்கள் மூலம்.  அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன இந்தச் சாதனங்கள். கலாசார சீரழிவுகள், தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தக்க வகையில் இச் சாதனங்கள் மாறிவிட்டன. அதன் விளைவு, கல்வி, கேள்வி அறிவுகளில் வடமாகாணம், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

“எனவே, எமது இளைய தலைமுறை சரியான பாதையில் பயணிப்பதற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு, எம்மத்தியில் காணப்படுகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X