2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘அனைவரும் குறை கூறுகின்றனர்’

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“தமிழ், சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி, நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரும் வடமாகாண சபையைக் குறைகூறுகின்றனர்” என, வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை, வினைத்திறன் இல்லை, வந்த பணத்தைச் செலவழிக்காமல் திருப்பி அனுப்புகின்றார்கள் என, விதவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அதன் மூலம் வடமாகாண மக்கள் மத்தியில் அந்த கருத்துகளை, மிகவும் ஆழமாகப் பதித்துவிட்டார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றார்.

இதேவேளை, “வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என எனக்குத் தெரியாது. அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுநரைச் சந்தித்துக் கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில், ‘சிவாஜிலிங்கம், ஆளுநரைப் பின்கதவால் சந்தித்தார்’ என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுநரின் அலுவலகத்துக்குச் செல்வதற்கு, பின் வழியாக வாசல் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது.

“அதேபோல, அண்மையில் மற்றுமோர் ஊடகம், ஒரு பக்கத்தில் மேலே ‘ஏமாற்றப்பட்டார் சிவாஜிலிங்கம் டொட் டொட் டொட்’ என, தலையங்கத்துடன் செய்தி. அதன் கீழே, ‘மாடிப்படியில் இருந்து இறங்கி வர மறுத்த முதலமைச்சர்’ என தலையங்கத்துடன் ஒரு செய்தி.

இரு செய்தி அறிக்கைகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், பக்கத்தின் தலையங்கத்தை மாத்திரம் வாசித்துச் செல்பவர்கள், ஏதோ சிவாஜிலிங்கம், முதலமைச்சருக்கு வெடி குண்டுடன் போய் நின்ற போது, முதலமைச்சர் கீழே வராமல் இருந்தார். அதனால் சிவாஜிலிங்கம் ஏமாற்றப்பட்டார் என விளங்கிக் கொள்ள கூடும்.

“இவ்வாறு மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .