2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அபிவிருத்திக் கூட்டத்தில் அரசியல் பேச்சு: மக்கள் அதிருப்தி

Gavitha   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வலி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அரசியல் பேசியதால் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

புத்தூர் பகுதியிலுள்ள வலி கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் குறித்த பிரதேச சபையின் அபிவிருத்தி ஆலோசனை கூட்டம்  சனிக்கிழமை (26) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மேற்படி பிரசேத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது உரையாற்றிய மவை சேனாதிராசா, அரசியல் சார்ந்த கருத்துகளை முன் வைத்து தனது உரையை ஆற்றினார்.  இதன்போது அதிருப்தி அடைந்த நபரொருவர், 'அபிவிருத்தி ஆலோசனைக் கூட்டம் என்று அழைத்துவிட்டு அபிவிருத்தி தொடர்பாக கதைக்காமல் அரசியல் பற்றி கதைப்பது முறையல்ல'  என்று தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ஏ.பரஞ்சோதி, குறித்த நபரை மண்டபத்தை விட்டு வெளியில் செல்லுமாறு தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சிலர் மண்டபத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மாவை சேனாதிராசா தனது உரையை  தொடர்ந்தார்.

இந்நிலையில் மண்டபத்தை விட்டு வெளியேறியோர்,

'அபிவிருத்தி கூட்டம் என்று அழைத்து விட்டு அரசியல் பற்றி கதைக்கிறார்கள். மத்திய அரசுடன் பேசுவதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும், ஐ.நா.வுடன் பேசுவதற்கு நமது ஒற்றுமை வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்குத் தான் நாம் இவர்களை பிரதிநிதிகளாக்கியுள்ளோம்.

எமது பிரச்சினையை இவர்களிடம் கூறுவதற்கே வந்தோம். எனினும் இவர்கள் அம்முடன் கலந்தாலோசிக்காது, அரசியல் பற்றி பேசுகின்றனார். அப்படியானால் எம்முடைய பிரச்சினையை நாம் யாருக்கு கூறுவது' என்று கேள்வியெழுப்பினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X