2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிக்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையில், வியாழக்கிழமை (05) பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், வியாழக்கிழமை (05) நடைபெற்ற போதே, இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிரேரணையை முன்வைத்து அமைச்சர் உரையாற்றுகையில்,

'நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையானது அவசரமானதும், அவசியமானதுமான பிரச்சினையாகும். பொதுவாக நாடுகளில் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று அவை பேச்சுவார்த்தை மூலமோ அன்றி போரின் மூலமோ முடிவடைந்த நிலையில் அரசியல் கிளர்ச்சியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்வது உலகமரபாகும். 

எனினும், எமது நாட்டில் நடைபெற்ற தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டத்தின் பின்னர் இவ்வாறான நடைமுறை பினபற்றப்படவில்லை. குறிப்பாக 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நடைமுறை தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

தற்போது ஆயுதப் போராட்டம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீண்டும் உருவாவதற்கு சந்தர்ப்பம் இல்லையென அரசாங்கமே கூறிவரும் நிலையில் இவ்வாறாக தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதானது எந்த வகையிலும் நியாயமாகாது. கடந்த ஜனவரியில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களாக இருந்த தமிழ் மக்கள், புதிய ஆட்சியில் தமக்கான அரசியல் விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையிலேயே பெருவாரியான வாக்குகளை நல்லாட்சி அரசுக்கு வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரியாசனத்தில் அமர்ந்த புதிய நல்லாட்சி அரசானது ஆகக்குறைந்தது இவ்வாறாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பை வழங்கி உடனடியாக விடுதலை செய்து தனது நல்லிணக்க சமிஞ்சையை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்.

அரசாங்கம் கூறியது போல 7ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள், விடுவிக்கப்பட வேண்டும், அவ்வாறு விடுவிக்கப்படாவிட்டால் அனைத்துத் தரப்பினரையும் வீதியில் இறக்கி நாடுபூராகவும் போராடவேண்டியேற்படும் எனவும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .