2025 ஜூலை 26, சனிக்கிழமை

‘அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும்’

Yuganthini   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
நாட்டில் அரசியல் கைதிகள் தற்போது இல்லை என்று அரசாங்கம் கூறுவது, தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பு, நல்லை ஆதீன குரு முதல்வரை, நல்லை ஆதீனத்தில் இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சந்திப்பு தொடர்பாக  அருட்தந்தை மா.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அரசியல் கைதிகளுக்குத் தண்டனை கொடுக்க நினைப்பதை, தமிழ் மக்களின் அரசியலுக்குக் கொடுக்கும் தண்டனையாக நாங்கள் கருதுகின்றோம். நாட்டில் இனவாத பயங்கரவாதம் நிலவியதால், அதற்கு முகம் கொடுப்பதற்காக தான், தமிழ் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். “அதனை நசுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது தான், பயங்கரவாத தடுப்புச் சட்டம். பயங்கரவாத தடுப்புச் சட்டம், தற்போதும் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை, அநீதியான ஒன்று. அதனை, சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“கைதிகளின் பிரச்சினை, தனியே அவர்களுடைய குடும்பப் பிரச்சினையாக அல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையாக இருக்க வேண்டும். அரசியல் கைதிகள் அனைவரும், தமிழ் மக்களின் பிரச்சினைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மதத்தலைவர்கள், அரசியல் பிரச்சினை என எண்ணாது, மக்களின் பிரச்சினை எனக் கருதி, ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அக்கோரிக்கையை முன்வைக்கவே, இன்றைய சந்திப்பு இடம்பெற்றது” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X