2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘அரசியல்வாதிகளே வெளியேறுங்கள்’

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், எஸ்.ஜெகநாதன் 

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று (11) இடம்பெற்ற பேரணியில், அரசியல்வாதிகளை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சல் இட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணியானது,  யாழ். பிரதான வீதியில் உள்ள சமாசத்தின் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியின் ஆரம்பத்தில், தனது பங்களிப்பை வழங்குவதுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சமாசத்துக்குச் சென்றிருந்தார்.

இதன்போது ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல்வாதிகள் வெளியில் செல்லுங்கள். வேண்டுமென்றால் வீதியில் பேரணி ஆரம்பமாகும் போது, கலந்துகொள்ளலாம். ஆனால் சமாசத்திற்குள்ளோ அல்லது எமது பேரணியின் இதர செயற்பாட்டிலோ இருக்கவேண்டாம் என கூச்சல் இட்டனர். இதனால் மாவை சேனாதிராசா உடனடியாக அவ்விடத்தில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்தனர். எனினும் அவர்களையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.

அரசியல்வாதிகள் எமது போராட்டங்களுக்கு வருகிறீர்கள், பலவற்றை கதைக்கிறீர்கள், ஆனால் அவற்றை செயல்படுத்தாமல் விட்டுவிடுகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினை தொடர்பில் குரல் கொடுப்பதில்லை, மக்களின் அன்றாட பிரச்சினை, அத்தியாவசியபொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கும் குரல் கொடுப்பதில்லை, மீன்பிடி தொழில் செய்யும் எமக்கு பாரிய பிரச்சினை மண்னெண்ணை விலை உயர்வு. அதற்கும் எமது அரசியல்வாதிகள் குரல்கொடுக்கவில்லை. இதை விட்டுவிட்டு “நினைவேந்தலுக்கு வழங்கிய ஏழு ஆயிரம் ஷரூபாயை திருப்ப தரச்சொல்லி” ஒருவர் கேட்கிறார். என்ன இது?” என அரசியல்வாதிகள் மீதான தமது ஆதங்க கருத்துக்களை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

மீனவசமூகம் என்பது பரந்துபட்டதாகும் நாம் வாக்காளிக்காவிட்டால் நீங்கள் யாரும் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க முடியாது. எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதுக்காக எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாது “சும்மா போராட்டம் என்றவுடன் புதுவேட்டி கட்டிக்கொண்டு வந்திடுவார்கள்” என போராட்டக்காரர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X