2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

​ ’ஆய்வால் வயல் நிலங்கள் உவரடைகின்றன’

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்துக்கு அருகில் சீமெந்து தொழிற்சாலை நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் ஆய்வுகளால் வயல் நிலங்கள் உவரடைவதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்துக்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களைப் பொருத்தி நீரை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்கப்படும் உவர் நீர் அப்பகுதி வயல் நிலங்களில் பாய்ச்சுகின்றார்கள். அதனால், வயல் நிலங்கள் உவராக மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அதனால், வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாது போகும். அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என மாகாண சபையில் கோரிக்கை விடுத்தார்.

அது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் ப.அரியரட்ணம் தெரிவிக்கையில்,

"இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள சக மாகாண சபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

நான் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தேன். அது டோக்கியோ சீமெந்து நிறுவனம் மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, அப்பகுதியில் சீமெந்து தயாரிக்க கூடிய கற்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.

தற்போது பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்று விட்டார்கள். பரிசோதனை அறிக்கையின் பிரகாரமே அவர்கள் முடிவெடுப்பார்கள். இது தொடர்பாக அடுத்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும்" எனத் தெரிவித்தார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வை. தவநாதன், "கடந்த ஆட்சி காலத்தில் சீமெந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் தற்போது அதற்கு ஆதரவாக செயற்படத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தற்போது அவ்வாறு செயற்பட காரணம் கையூட்டு பெற்று விட்டார்களா என சந்தேகிக்க வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .