2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘ஆவா குழுவின் உளவாளி வௌ்ளை வானில் கடத்தல்’

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா, எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, நேற்று (21) வெள்ளை வானில் பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் உளவாளியாகச் செயற்பட்டவர் என, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  

யாழ்ப்பாணம் - பிறவுண் வீதி, 5ஆம் ஒழுங்கை, கலட்டிப் பகுதியைச் சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் (வயது 17) என்ற இளைஞரே, இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.  

அவரை எவரும் கடத்தவில்லை எனவும் பொலிஸாரே அவரைக் கைது செய்ததாகவும் கூறிய பொறுப்பதிகாரி, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவரது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக வைத்து, நேற்று (21) இரவு 8 மணியளவில், வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார், இளைஞர் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்றதாக, பொதுமக்களாலும் பாதிக்கப்பட்ட இளைஞனின் பெற்றோராலும் தெரிவிக்கப்பட்டது.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொறுப்பதிகாரி கூறியதாவது, 

  “கடத்தப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட இளைஞர், ஆவா குழுவின் உளவாளியாகச் செயற்பட்டு வந்தவர். அவரை பல தடவைகள் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும் தப்பிச் சென்றமையால், இரகசியமான முறையில் சிவில் வாகனத்தில் வந்து குறித்து இளைஞரை, பொலிஸார் கைதுசெய்தனர்.  

“யாழ். நகரில் உள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் குறித்த இளைஞன், வேலை முடிந்தது வீட்டுக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார்.  

இதன்போது, சிவில் உடையில் சென்ற பொலிஸார், அவரை வானில் ஏறுமாறு கூறியபோது, அவர் ஏற மறுத்தார். இதையடுத்தே, இளைஞரை பலாத்காரமாக ஏற்றிச்சென்றோம். அங்கிருந்த பொதுமக்களுக்கு இது கடத்தலாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர் ஆவா குழுவின் பிரதான உளவாளி. யாழில் இடம்பெற்ற முக்கியமான பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு, இவரே உளவாளி வேலை செய்தவர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இதையடுத்து, தேடப்பட்ட நபர் என்ற அடிப்படையிலேயே இரகசியமான முறையில் அவரை கைதுசெய்தோம். பொலிஸ் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .