2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இணையத்தளங்களுக்கு சட்டம் வேண்டும்: வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள் இலங்கையில் அமுலில் இருப்பது போன்று, இணையத்தளங்களையும் ஒழுங்குபடுத்த சட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சைக் கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

'இலங்கையில் அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டவிதிகள் அமுலில் இருக்கின்றன. ஆனால் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் அமுலில் இல்லை. சில இணையத்தளங்கள் நாட்டுக்கு வெளியே இயக்கப்படுகின்றன. அவ்வாறான இணையத்தளங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றன. கலாசாரத்தை கொச்சைப்படுத்தி வெளியிடுகின்றன. இளம் சந்ததியினரைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிடுகின்றன.

இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச படங்கள், காணொளிகளை வெளியிடுகின்றன. கட்டுப்பாடுகள் இல்லாமையால் சுதந்திரமாக அவற்றை வெளியிடுகின்றனர். இது சமூக அச்சுறுத்தலாகவுள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்வதற்கு சட்டப்படி ஏற்பாடுகளை செய்யுமாறு, வெகுஜன ஊடக அமைச்சை கோரவுள்ளோம். பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை தொழில்நுட்ப ரீதியில் தடை செய்வதற்கும் கோரவுள்ளோம்' என்றார்.

இந்தப் பிரேரணை ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்படவில்லை. புங்குடுதீவு மாணவி கொலையின் பின்னர் அந்த மாணவியை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பொறுப்புக்கூறாத இணையத்தளங்களில் வெளிவந்தன. இதனையடுத்தே இந்தப் பிரேரணையை கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .