2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

’இரணைமடு குழு அறிக்கையை வெளியிடாமல் அதிகாரிகளை எவ்வாறு தண்டிப்பது?’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்சன்

இரணைமடு குளத்தினால் கடந்த 2018ம் ஆண்டு உண்டான அனர்த்தம் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணை குழு அறிக்கையினை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கும் ஆளுநர் ஊழல் அதிகாரிகளை தண்டிப்பேன் என கூறுவது வேடிக்கையான ஒரு கருத்தாகும். என மக்கள் முன்னேற்ற கூட்டணியின் தலைவர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி இரணைமடு அனர்த்தம் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிடவேண்டும் என கேட்டிருந்தோம். அதன் பின்னர் சில ஊடகங்களுக்கு கருத்து கூறிய வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஒருவார காலத்திற்குள் அந்த அறிக்கையை வெளியிடுவேன் என கூறினார்.

ஆனால் ஒருவாரம், இருவாரம் கடந்தும் அறிக்கை வெளியாகவில்லை. அண்மையில் ஊழலுக்கு எதிரான அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில் ஊழல் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என கூறிய ஆளுநர் அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது வேடிக்கை. 

நாங்கள் அறிந்தளவில் சுமார் 400 கோடிக்கும் மேல் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும், அதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அதிகாரிகளுக்கான இடமாற்றம் ஊழலுக்கான தண்டணை அல்ல. அவர்களுக்கு ஊழலுக்கான தண்டணை வழங்கப்பட வேண்டும். 

சுரண்டிய மக்களின் பணத்தை மீள பெற்று மக்களிடம் கொடுக்கவேண்டும். மேலும் இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டுள்ள அதிகாரி ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இரணைமடு அபிவிருத்திக்கு ஒப்பான திட்டம் முல்லைத்தீவிலும் வரவுள்ளது. அங்கும் அந்த அதிகாரி இதைதான் செய்வார்.

மேலும் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இரணைமடு அறிக்கை எங்கே? அதனை ஏன் வெளியிடவில்லை? என கேட்க தயாராக இல்லை. மாறாக ஊழலுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரியாவிடை நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள்கின்றார்கள். 

எனவே இந்த அறிக்கையை ஆளுநர் உடனடியாக வெளியிடவேண்டும். இல்லையேல் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் முயற்சிப்போம் என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X